வட மாகாண சபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி, மக்களுடைய ஆதரவைப் பெறும் என தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2026ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றிய கட்சிகள் தேர்தலுக்காக மீண்டும் ஒன்றிணையப் போவதாகக் கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும், அவர்கள் தமிழ் மக்களுக்காக ஒற்றுமைப்படுவதாக இருந்தால் தேர்தல் இல்லாத காலத்திலேயே ஒற்றுமைப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த தேர்தல்களில் வடக்கில் பெற்ற ஆதரவைப் போலவே, வரவிருக்கும் மாகாண சபை தேர்தலிலும் மக்களுடைய ஆதரவைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜெகதீஸ்வரன், தாம் இதயசுத்தியுடன் வடக்கு மாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் கூறினார்
அத்துடன், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கில் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தவும், சட்டவிரோத நிதியீட்டங்கள் தொடர்பாகவும் தமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மேலும் தெரிவித்தார்.



