இலங்கையின் 80 ஆவது வரவு, செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ளார். நாட்டின் பொருளாதார மீட்சியை இலக்காகக் கொண்டு பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை வரவு,செலவுத் திட்டம் முன்மொழிந்திருந்திருப்பதாக அவர் வெளிப் படுத்தியுள்ளார்.
ஆனால் அத்திட்டங்களின் அடிப்படை நிதிப் போக்குகள் குறிப்பிடத்தக்க சவால்களைக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் நிதிக் கணிப் பீடுகளின்படி, 2026ஆம் ஆண்டுக்கான மொத்த வருமானம் 5,300 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப் பட்டுள்ளது.
எனினும், பல்வேறு துறைகளுக்கான அதிகரித்த நிதி ஒதுக்கீடுகள் காரணமாக மொத்தச் செலவீனம் 7,057 மில்லியன் ரூபாவாக உயர்ந்துள் ளது. இதன் விளைவாக, வரவு,செலவுத் திட்டத்தில் 1,757 மில்லியன் ரூபா துண்டுவிழும் தொகை ஏற்பட்டுள்ளது.
1,757 மில்லியன் ரூபா என்ற இந்த மிகப்பெரிய துண்டுவிழும் தொகையானது, மொத் தச் செலவீனத்தில் ஏறத்தாழ காற்பகுதியா கும். இதன்பொருள், அரசாங்கம் தன் வருமானத்தில் காற்பங்கிற்கும் அதிகமாகச் செலவு செய்யவுள்ளது என்பதாகும்.
இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடன் பெறுவது அவசியமாகிறது, இது நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமையை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். பொருளாதார பாதிப்புகளுக்கு மத்தியில் இந்த வரவு, செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான உடன்பாடுகளை மையப்படுத்தியதாகவே தயாரிக் கப்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்க லைக்கழகத்தின் பேராசிரியர் காமினி வீரசிங்க குறிப்பிட்டதைப் போல, இந்தச் சூழ்நிலையில் வரவு,செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையைக் குறைத்து, அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
அரச வருமான இலக்குகள் 15.3சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்தத் துண்டுவிழும் தொகையானது, வருவாய் இலக்குகளை அடைவதிலும், நிதிக் கட்டுப் பாட்டிலும் உள்ள சவால்களைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
செலவீனங்கள் அதிகரித்ததற்கான கார ணங்களைப் பார்க்கும்போது, அரச ஊழியர் களுக்கான சம்பள திருத்தங்களின் இரண்டாம் கட்ட நடைமுறைக்காக 110 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பது, பெருந் தோட்டத் தொழிலா ளர்களின் நாளாந்த ஊதியம் 1,750 ரூபாவாக உயர்த்தப்பட்டமை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல கொடுப்பனவு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்ப ட்டமை போன்ற மக்கள் நலன்சார்ந்த முன்மொழிவு களே முக்கிய காரணமாகும்.
அத்துடன், சுகாதாரத்துறைக்கு (554 பில்லி யன் ரூபா) மற்றும் கல்வி (301 பில்லியன் ரூபா) போன்ற மக்கள் நலன்சார் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் 2025ஆம் ஆண்டை விட கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் அடிப்படைச் சேவைகளின் தரத்தை மேம்படுத்த இந்த நிதி ஒதுக்கீடுகள் முக்கியமானவை என்றாலும், அவற்றை மிகவும் திறம்படச் செலவழித்து, நிதி வீண்விரயத்தைத் தடுப்பது அரசாங்கத்துக்கு தற்போதுள்ள நிர்வாக சவாலாகும்.
இந்த வரவு, செலவுத் திட்டத்தின் மூலம், அரச வருவாயை நேரடியாக வரி (60சதவீதம்) மற்றும் மறைமுக வரி (40சதவீதம்) என்ற விகிதத்திற்குக் கொண்டுவருதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான சீர்திருத் தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம், முதலீட்டாளர்களுக்கு வதிவிட விசா போன்ற முன்மொழிவுகள் முற்போக்கான பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டுள்ளன. எனினும், ஒவ்வொரு ஆண்டும் வரவு, செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் அனைத்தும் முறையாகச் செயற்படுத்தப்படுவதில்லை என்ற பொதுமக்களின் அவநம்பிக்கையை வெற்றி கொள்ள வேண்டிய நிலைமைகள் தாராளமா கவே உள்ளன.
எனவே, வாழ்க்கைச் செலவைக் குறைத்து, மாதச் சம்பளத்திற்கும் வாழ்க்கைச் செலவுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புகள், அதிகரித்த செலவினங்களால் ஏற்படும் பணவீக்க அழுத்தத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புக் களே அதிகமுள்ளன.
நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதை அடிப்படையாகக்கொண்டு முன் வைக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத் திட் டம், அதன் இலக்குகளை அடைவதற்கு, நிதி நிர் வாகத்தில் சமநிலையுடன் கூடிய ‘இறுக்கமான பிடிப்பு’ அவசியமாகிறது.
1,757 மில்லியன் ரூபா என்ற துண்டுவிழும் தொகையின் சுமையைக் குறைப்பதற்கு, அரசாங்கம் உடனடியாக வருமானம் ஈட்டுவதற்கான புதிய மற்றும் திறமையான வழிகளைக் கண்டறிவதிலும், அதேசமயம் அத்தியாவசியமற்ற மற்றும் பயனற்ற செலவினங்களைக் கடுமையாகக் கட்டுப் படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் சிறப் பாக நிர்வகித்து, எதிர்பார்க்கப்பட்ட வருவாயை முழுமையாக ஈட்டினால்தான், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டம் அதன் இலக்குகளை அடைவதுடன், நாட்டின் பொரு ளாதார ஸ்திரத்தன்மைக்கும் வலுச்சேர்க்கும். ஆனால், வரி-மொத்த உள்நாட்டு உற் பத்தி விகிதத்திற்கு நம்பகமான, சமபங்கு சார்ந்த பாதையை வழங்குகிறதா? தனியார்துறை வளர்ச் சியை வழிநடத்த முதலீட்டுத்துறையை உண் மையிலேயே எளிமைப்படுத்தி, அதிகாரத்து வத்தை நீக்குகிறதா? எதிர்காலத்திற்கு ஏற்ற, திறமையான மனித மூலதன தளத்தை வளர்ப் பதற்கு பொது நிதியை மூலோபாய ரீதியாக ஒதுக்கீடு செய்கிறதா? வெளிப்படைத்தன்மையை அமல்படுத்துவதற்கும், அரசமுகாமை நிறுவனங் களை சீர்திருத்தம் செய்வதற்கும், வீணான செலவி னங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற் கும் நிதி வழிமுறைகள் உள்ளதா? போன்ற கேள்வி களுக்கு முழுமையான பதில்கள் இல்லை.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்களை மையப்படுத்தியதாக இந்த வரவு,செலவுத்திட்ட முன்மொழிவுகளை நோக்கினால், எந்தவொரு நன்மைகளும் இல்லை என்று ஒரேவார்த்தையில் இலகுவாகக் கூறக்கூடிய நிலையே உள்ளமை யானது துரதிஷ்டவசமாகும்.
குறிப்பாக, 2025 ஆம் ஆண்டுக்காக பாது காப்பு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக் களுக்காக 61,744கோடியே 50இலட்சம் ரூபா ஒதுக் கப்பட்டது. 2026ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2026ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 3055 கோடியே 50 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. போர் நிறைவுக்கு வந்தபோதும், வட, கிழக்கில் முப்படைகளையும் நிலை கொள்ளச் செய்வதற்காக வருடாந்தம் கடந்த கால அரசாங் கங்கள் பாரிய அளவில் பாதுகாப்புத் துறைக்கு நிதி ஒதுக்கீட்டைச் செய்துவந்தன. அதன் நீட்சியாகவே அநுர அரசாங்கமும் பாதுகாப்புத்துறைக்கான ஒதுக் கீட்டை தனது பங்கிற்கும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, வரவு, செலவுத்திட்டஉரை யின் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக அநுரகு மார தவறியேனும் ஒருவார்த்தைகளையும் வெளி ப்படுத்தியிருக்கவில்லை. வெறுமனே மாகாண சபைகளுக்கான தேர்தலுக்காக 10பில்லின் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டும் வெளிப் படுத்தியுள் ளார். ஆனால், மாகாண சபைகளுக்கான தேர் தலை நடத்துவதற்கான காலப்பகுதியை அவரால் அறிவிக்க முடிந்திருக்கவில்லை. அவர் ‘பந்தை’ பாராளுமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டு தப்பித் துக்கொண்டுள்ளார்.
இதனைவிடவும், முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்கான சட்டத்தினை உருவாக்கப் போவதாக அறிவித்திருக்கின்றார். ஆனால் வடக் கிலும், கிழக்கிலும் முதலீட்டாளர்கள் வருகை தருவதற்கு பாதுகாப்பான சட்டமல்ல முக்கியமாக உள்ளது.
மாறாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பது தான் முக்கியமானது என்பது அநுரகுமாரவுக்கு இன்னமும் புரியாதிருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அவர் அந்த விடயத்தினை திட்டமிட்டே தவிர்த்திருக்கின்றார் என்பது வெளிப்படையானது.
பொதுப்படையில், காணப்படும் மாற்றுத் திறனாளிகள், வறுமைக்கோட்டுக்குள் வாழ்ப வர்கள், கடற்றொழிலாளர்கள் உள்ளிட்டவர்களை மையப்படுத்திய நலத்திட்ட அறிவிப்புக்கள் வடக்கு,கிழக்கிற்கும் பொருந்துகிறதே தவிரவும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான விசேட ஒதுக்கீடுகள் எவையும் குறிப்பிடும்படியாக இல்லை.
அதேபோன்று தான் பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு பற்றி குறிப் பிடப் பட்டுள்ளபோதும், காங்கேசன் துறைமுக மேம் பாடு பற்றி மௌனம் கலைக்கப்படவில்லை. அந்தவகையில் பார்க்கின்றபோது, இலங்கையர் தினத்தை பிரகடனம் செய்துள்ள அநுர அரசாங்கம் இன்னமும் அனைவரையும் இலங்கையர்களாக கொள்ளும் மனோநிலைக்கு வரவில்லை என்பது தெளிவாக புலப்படுகிறது.
ஆகவே அநுரகுமாரவின் இந்த வரவு, செலவுத் திட்டம் உறுதியான பாதையை வழங்கு கிறதா அல்லது வாக்குறுதிகளால் சோர்வுற்ற மக்களை வசீகரிக்கும் மாயையா என்ற கேள்வி கள் நிறைந்ததாகவே உள்ளது.



