வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எஸ்.சிறீதரன் கருத்து!

‘இலங்கையில்  புரையோடி போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.  2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வருடாந்த சடங்கு மாத்திரமே’ என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,   ‘ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு சம்பிரதாயமாக சடங்காகவே உள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் முக்கிய பிரச்சனையாகவுள்ள  இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி எந்த ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை .

2025 ஆம் ஆண்டில்  கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பில் ஜனாதிபதி ஏதும் சொல்லவில்லை. தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை என எந்த ஒரு விடயமும் இதில் உள்ளடக்கப்படவில்லை. ஆசிய வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெற்று அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து செல்வதாக ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறு பெரும் கடன்களை எந்த வகையில் இவர்கள் அடைக்கப் போகின்றார்கள். அதுவும் மக்களின் தலைகளில் தான் சுமத்தப்படும்.

வழமையாக ஒரு அரசாங்கம் வருடாந்தம் கொண்டுவரும் ஒரு வரவு செலவுத் திட்ட சடங்காகவே இந்த வரவு செலவுத் திட்டமும் அமைந்துள்ளது. அதாவது இது ஒரு வெற்று வரவு செலவுத் திட்டமென்று தெரிகின்றது’ என்றார்.