தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக சென்ற இளைஞர் கைது

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக படகில் புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் இராமேஸ்வரம் சென்ற இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர்  கைது செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவிய இலங்கை நபர் ஒருவர் இராமேஸ்வரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (08) அதிகாலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில்  காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே இருந்த பூங்காவில் சந்தேகத்திற்கிடமாக அமர்ந்திருந்த நபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் இலங்கை பணம், இலங்கை கடவுச்சீட்டு, இலங்கை தேசிய அடையாள அட்டை ஆகியவை   இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வர் இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், வல்வெட்டித்துறை நடராஜன் வீதியைச் சேர்ந்த கண்ணன் ( வயது-34) என்பது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் கடந்த 6 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகில் புறப்பட்டு நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வந்து இறங்கியுள்ளார்.

பின்னர் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள கண்ணனின் மனைவியை பார்ப்பதற்காக வேதாரணியத்தில் இருந்து பேருந்தில் புறப்பட்டு இராமேஸ்வரம் பேருந்து நிலையம் வந்து, மண்டபம் அகதிகள் முகாமிற்கு செல்வதற்காக பூங்காவில் அமர்ந்திருந்தபோது காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரை காவல்துறையினர் இராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட நபர் மீது கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வழக்குப் பதிவு செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், குறித்த நபரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.