2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: சபையில் இன்று ஜனாதிபதி சிறப்பு உரை

2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை ( நவம்பர் 7, 2025) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து,  உரையாற்றவுள்ளார்.

இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2 ஆவது வரவு – செலவுத்திட்டமாகவும் அமைகின்றது. வரவு – செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.

2026  நிதியாண்டுக்கான  வரவு – செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக கடந்த மாதம்  26ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைய இரண்டாவது மதிப்பீடான வரவு – செலவுத்திட்ட உரையை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  இன்று  பாராளுமன்றத்தில்  நிகழ்த்தவுள்ளார்.

நாளை (8) முதல்  எதிர்வரும் டிசம்பர்  5ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

நவம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலைவிவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி மாலை  6  மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு-செலவுத் திட்ட விவாதம் இடம்பெறும்

2026 நிதியாண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டம் குறித்து அரச மற்றும் தனியார் துறையினர் உட்பட ஆசிரியர்கள், வைத்தியர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள்,மற்றும் கைத்தொழிற்றுறையினர் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் நிதியமைச்சுக்கு 634 பில்லியன் ரூபா, பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபா, சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்கு 554 பில்லியன் ரூபா, கல்வி ,உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபா, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபா, அரச நிர்வாகம் மற்றும் பொதுநிர்வாக அமைச்சுக்கு 569 பில்லியன் ரூபா என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டம் குறித்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொருளாதார திணைக்களத்தின் பேராசிரியர் காமினி வீரசிங்க குறிப்பிடுகையில்,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தான் இந்த வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையை குறைத்து அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். அத்துடன் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திலான கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.