போதைப் பொருள் வர்த்தகத்தின் மையமாக மாறும் இலங்கை!

கடல் மார்க்கமாக நடைபெறும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளும் பிரதான இலக்குகளாகவும், போதைப்பொருள் பரிமாற்றம் செய்யும் மையங்களாகவும் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பிரிவு, அரச நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளின் கட்டமைப்பு, இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதியில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கான அனுசரனை தொடர்பான தகவல்களை ஆராய்ந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் போதைப்பொருள் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு அண்மையில் அமைந்திருப்பதாலும், நீண்ட கடற்கரை மற்றும் அதன் பூகோள அமைப்புக் காரணமாகவும், இந்த நாடுகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிரதான மையங்களாக மாறியுள்ளன.

தங்க பிறை என அழைக்கப்படும் ஈரான், ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஊடாகப் பெறப்படும் கிரிஸ்டல் மெத் – ஐஸ் (Crystal Meth – Ice) மற்றும் ஹெரோயின் போன்ற செயற்கை போதைப்பொருட்கள் இலங்கைக்குள் அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன.

பலூசிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் அமைந்துள்ள மக்ரான் கடற்கரை (Makran coast) வழியாக இந்தப் போதைப்பொருள் விநியோகம் ஆரம்பமாகிறது. இந்த போதைப்பொருட்கள் ஆபிரிக்காவுக்கு விநியோகிக்கப்படுவதுடன், அங்கிருந்து அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மறுவிநியோகம் செய்வதற்காக மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கும் கடத்தி வரப்படுகின்றன.

கடத்தல்காரர்கள் அரபிக் கடலில் தொடங்கி, இந்து சமுத்திரம், மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் தீவு போன்ற பகுதிகளைச் சுற்றி வந்து இலங்கை வருகின்றனர். இவர்கள் இந்தப் போதைப்பொருட்களைக் கடத்துவதற்குப் நெடுநாள் ஆழ்கடல் படகுகள் மற்றும் பெரிய சரக்குக் கப்பல்களையும் பயன்படுத்துகின்றனர்.
வடக்கில் மன்னார், காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கற்பிட்டி போன்ற பகுதிகளில் அதிகளவில் கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

தெற்கு கடற்பகுதி வழியாக ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களைக் கடத்தல்காரர்கள் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதேவேளை, ஐக்கிய நாடுகளின் இந்த அறிக்கை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உள்ள பிரதான குறைபாடுகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

சட்டம் அமுலாக்கம் மற்றும் சட்ட நிறுவனங்களுக்குள் காணப்படும் ஊழல் ஒரு பாரிய பிரச்சினையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், போதைப்பொருள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிவடைய அதிக கால அவகாசம் எடுப்பதையும் ஒரு பலவீனமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .இதன் காரணமாக, போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தற்போதுள்ள சட்ட கட்டமைப்பை புதுப்பித்து வலுப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.