அமெரிக்க அரசத்தவைர் ட்ரம்பின் சீனத் தலைவருடனான தென்கொரிய மாநாட்டுச் சந்திப்பு ஒரு வருடகாலத்துக்கு அமெரிக்க சீன வர்த்தகப் போரை தற்காலிகமாக நிறுத்தி அமெரிக்காவின் சோயாவை சீனா இறக்குமதி செய்தல் அமெரிக்காவுக்கு அருமூலிகங்களை சீனா வழங்குதல் அமெரிக்கா சீனாவுக்கு அறிவித்துள்ள 57 வீத வரிவிதிப்பை 10 வீதம் குறைத்து 47 வீதமாக நடைமுறைப்படுத்தல் போன்ற பொருளாதார வாய்ப்பாடுகளுடன் முடிவடைந்துள்ளது. அதே வேளை அமெரிக்காவும் சீனாவும் பலமான வர்த்தக மோதல் ஒன்றுக்கான கால அவகாசத்தையே உருவாக்கியுள்ளன என இந்தச் சந்திப்புக்குறித்த ஆய்வாளர்கள் கருத்துக்கள் அமைந்துள்ளன எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவுடன் அமெரிக்கா நடாத்தி வரும் வரிவிதிப்புப் பேச்சுக்கள் இருநாட்டினருக்கும் சாதகமாகத் தொடர்கிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு செய்திகளும் கூடவே காசாவில் மீளவும் இஸ்ரேயலி நடாத்தியுள்ள இனஅழிப்புத் தாக்குதலை அது யுத்த நிறுத்தத்தைப் பாதிக்காத கட்டுப்படுத்தல் நடவடிக்கையென ட்ரம்ப் அருள்வாக்குரைத்திருப்பதும் உலக அரசியலில் எல்லா வல்லாண்மைகளும் தங்கள் தங்கள் பொருளாதார பங்காண்மைகள் கூட்டாண்மைகளை போர்களை தாங்கள் விரும்பியவாறு நடாத்திக் கொண்டே தொடரும் புதிய உலக அரசியல் முறைமை ஆரம்பமாகிவிட்டதை உலகிற்குத் தெளிவுபடுத்தியுள்ளன.
இத்தகைய புதிய உலக அரசியல் ஒழுங்குமுறையில் ஈழத்தமிழர்கள் போன்ற சிறுதேச இனங்கள் தமக்கான வல்லாண்மை துணைகளை எப்படியேற்படுத்துவது என்பது சிக்கலான கேள்வி. சிறிலங்கா தனக்குப் பிரித்தானிய காலனித்துவம் வழங்கிய ஈழத்தமிழர்களின் இறைமையையும் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமையைப் பயன்படுத்தி இலங்கைத் தீவே சிங்கள பௌத்த நாடு என்கின்ற போக்கில் ஈழத்தமிழரை அவர்களுடைய பிரிக்கப்பட முடியாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் எதனையும் செய்ய விடாது அதிகாரப்படுத்தலை படைபலத்தின் மூலம் அவர்களின் அரசியல் பணிவைப் பெறும் அரசியலாகவே 77 ஆண்டுகள் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ட்ரம்ப் சீனாவுடன் எதனால் வளைந்து நெளிந்து அரசியல் செய்கின்றார் என்பதைச் சற்று சிந்திக்க வேண்டும். தனது நாட்டின் பிரதான உற்பத்திப் பொருள்களில் ஒன்றான சோயாவைச் சீனா வாங்க மறுத்தாலே பல பில்லியன் டொலர் நட்டத்தை அமெரிக்கப் பொருளாதாரம் சந்திக்கும்.
சீனா அருமையான கனிம வளங்களை அனுப்ப மறுத்தால் அதனைப் பயன்படுத்தும் அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப எழுச்சிகள் எல்லாமே தடுமாறும். இது எதனைக் காட்டுகிறது? ஒரு மக்கள் இனம் தனது பொருளாதாரப் பலத்தைத் தானும் உணர வேண்டும்-மற்றவர்களுக்கு வெளிப்படுத்தக்கூடியதாக விரல் நுனியில் வைத்துச் சொல்லஆயத்தமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த மண்ணையும் மக்களையும் குறித்த அக்கறை, ஆர்வம் கூட்டாண்மை பங்காண்மை விருப்பு பிறருக்கு ஏற்படும். ஆனால் ஈழத்தமிழர்களாகிய எமக்கு எமது மண்ணின் வளத்தன்மைகள் குறித்த பட்டியல் இல்லை-மனிதவலு குறித்த விபரப்பட்டியல் இல்லை- சமுகமூலதனமாக ஈழத்தமிழர்கள் தங்கள் நிதியை மூலதனமாக்கக் கூடிய செயற்திட்டங்கள் இல்லை. செய்ய வேண்டியனவற்றைச் செய்யாது விடுதல் என்பது பகைமையை விடப் பயங்கரமானது என்பதை ஈழத்தமிழர்கள் மனதிருத்த வேண்டும் என்பது இலக்கின் இவ்வார முதல் கருத்தாகவுள்ளது. இதனைச் செய்வதற்குச் குடிசார் அமைப்புக்கள் எல்லா நிலையிலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் அந்த அந்த மக்களின் வாழ்வியலின் தேவைகளின் அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட வேண்டும். எதிலும் உள்ள பொதுத்தன்மை கண்டறியப்பட்டு அதுவே மக்களின் மண்ணின் கருத்தாக வெளிப்படுத்தப்படுவதே உண்மையான சனநாயகப் போராட்டம்.
இந்நேரத்தில் ஆங்கில படைப்பாளரும் தத்துவ ஆசிரியருமான ஜி.கே. செஸ்டர்டன் “இதயத்திலிருந்து மேன்முறையீடு எழாது தலையில் இருந்து மேன்முறையீடு செய்யும் எவரும் வன்முறையாளராக கட்டாயம் மாறுவார்” என எழுதியமையை சீன பிரித்தானிய உறவு குறித்த தனது “த கார்டியன்” கட்டுரையான “பிரித்தானியா தனது சீனா மேலான அதிகாரம் எதில் தங்கியுள்ளது என்பதை நன்கு தெளிவாக நினைவில் வைத்திருக்க வேண்டும்” (‘Britain would do well to remember where its power over China lies’) என்னும் கருத்துப்பதிவில் சைமன் ஜென்கின்ஸ் மீள்பதிவு செய்திருந்தமையை ஈழத்தமிழர்கள் கவனத்தில் எடுக்க வேண்டுமென்பது இலக்கின் எண்ணமாக உள்ளது. மாவீரர் மாதம் நவம்பர் மாதம் என்பது ஈழத்தமிழருக்கு இதயத்திலிருந்து தங்களுக்காக பேசியவர்களின் செயற்பட்டவர்களின் நினைவை மீளுற்பத்தியாக்கும் மாதம். 37வது ஆண்டாக மாவீரர் மாதத்தில் ஈழத்தமிழர்கள் நுழைகையில் இன்று தலையிலிருந்து பேசுபவர்களின் செயல்களுக்கும் 1978 முதல் 2009 வரை 31 ஆண்டுகள் இதயத்தில் இருந்து பேசியவர்களின் செயற்பாட்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.
மீளவும் ஈழத்தமிழர்கள் நெஞ்சிலிருந்து பேசும் நேர்மையாளராக உண்மைக்குச் சாட்சியம் சொல்லும் அரசியலை முன்னெடுக்க இந்த மாவீரர் மாதத்தில் உறுதி பூணவேண்டும் என்பது இலக்கின் அழைப்பாகவுள்ளது. உண்மைக்கு அப்பாலானவற்றையே இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் விருப்பு என வெளிப்படுத்தும் அபாயகரமான நிலையில் ஈழத்தமிழர் அரசியல் பண்பாடு உள்ளது. தன்னைத்தானே மதிப்பீடு செய்யும் உயர் பண்பை விடுத்து அடுத்தவரை மதிப்பீடு செய்கின்றோமென அவர்களின் அரசியல் செயற்பாடுகளைப் பொருளாதார முயற்சிகளை சமுக உள்வாங்கல்களை தடுக்கும் சண்டித்தனத்தையே இன்று ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல ஈழத்தமிழ் சமுக ஊடகங்களும் தாராளமாக மக்கள் மயப்படுத்துகின்றனர்.
அத்துடன் சைமன் ஜென்கின்ஸ் அந்த எண்ணப்பதிவில் “பாதுகாப்புக்கென நிதிகளை ஒதுக்கி ஆரவாரம் செய்து கொண்டு அரசாங்கத்தினுடைய மிக முக்கிய சொத்தான “பண்பாட்டை” விரட்டியடிக்கக் கூடிய முறையில் அதற்கான பணத்தை வெட்டுகிறது” (“It’s ridiculous for the government to splurge on defence while it slashes spending on its most valuable asset: culture” ) என்ற கருத்தை அவருடைய எண்ணப்பதிவுக்கான துணைத்தலைப்பாக அமைத்துள்ளதையும் ஈழத்தமிழர்கள் கவனத்தில் எடுக்க வேண்டுமென இலக்கு வலியுறுத்த விரும்புகிறது. ஈழத்தமிழர்களின் அரசியல் பண்பாடு என்பது உயிர்த்தியாகங்கள் வாழ்விழப்புக்கள் தேசங்கடந்துறை வாழ்வு என்னும் அர்ப்பணிப்புக்கள் வழியாக இது எங்கள் சொந்த மண் என்கின்ற இறைமையையும் அதனை மீளுறுதி செய்ய தேசமாக ஒருமைப்பாட்டுடன் அனைவரும் உழைக்க வேண்டும் என்பதையும் தனது அடிப்படையாகக் கொண்டுள்ளது.
மேலும் கூட்டாட்சி முறை தொடர்பாக ஆளுந்தரப்பினர் தமிழ்க்கட்சிகளுடன் பேசத்தயார் எனச் சுவிஸ் தூதுவர் சிறிவோல்ட் கூறியுள்ளமை ஈழத்தமிழர்களால் கவனமாக எடுத்து நோக்கப்பட வேண்டிய ஒன்றாக அமைகிறது. சுவிட்சலாந்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 14ம் திகதி முதல் 21ம் திகதி வரை இடம்பெற்ற சிறிலங்கா சுவிட்சலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நட்புறவுச் சங்கச் செயலமர்வில் சுவிசின் கூட்டாட்சி முறைமை குறித்து தெளிவான விளக்கங்கள், அதில் கலந்து கொண்ட சிறிலங்காவின் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் முனைவர் உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திம ஹெட்டியாராட்சி நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க, தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் ஒருங்கிணைப்புச் செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான தலதா அத்துக்கோரள ஆகியோரும் சிறிலங்காவின் நாடாளுமன்றத்தின் தமிழ்ப் பிரதிநிதிகளான தமிழரசுக்கட்சியின் பத்மநாதன் சத்தியலிங்கம் தமிழ்க்காங்கிரசின் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சனநாயகத் தமிழ்க் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ. ரீ. பத்மா மஞ்சுளா ஆகியோருக்கு அளிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் தாங்கள் சிறிலங்காவின் அரசத்தலைவருக்குத் தங்களுடன் பேச வருமாறு தமிழரசுக்கட்சி அனுப்பிய கடிதத்துக்குப் பதில் கிடைக்கவில்லையென சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் சுவிஸ்தூதுவரிடம் முறையிட்டதற்கு அவர் இவ்வாறு கூறியுள்ளதாக காலைக்கதிர் விளக்கம் அளித்துள்ளது. அத்துடன் எந்தச் சிங்களக் கட்சிக்கும் என்றும் கூட்டாட்சிக்கான விருப்பு என்றும் மனப்பூர்வமாக இருந்ததில்லை என்பதையும் காலைக்கதிர் சான்றுகளுடன் விளக்கியும் உள்ளது. இந்நிலையில்தான் மாவீரர் அரசியல் பண்பாடு என்பதை ஈழத்தமிழர்கள் இந்த நவம்பர் மாதத்தில் உலகிற்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது என்பது இலக்கின் இவ்வார அழைப்பாகவுள்ளது. அத்துடன் “முழுநாடுமே ஒன்றாக” என்ற செயற்திட்டத்தைச் சிறிலங்கா அரச அதிபரும் பிரதமரும் இணைந்து சுகததாச விளையாட்டரங்கஉள்அரங்கில் இன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் புடை சூழ “போதைப்பொருள் ஒழிப்புக்காக”த் தொடக்கி வைத்துள்ளனர். இதனை வரவேற்கும் இலக்கு இவ்வாறே சிங்கள பௌத்த பேரினவாதப் போதையும் ஒழிவதற்கு இந்த அரசு இவ்வகைச் செயற்திட்டங்களைத் தொடங்க வேண்டுமென வலியுறுத்துகின்றது. ஈழத்தமிழரின் வரலாற்றுத் தாயகமும் தன்னாட்சி உரிமையும் ஏற்கப்படாதவரை சிங்கள பௌத்த பேரினவாதப் போதையால் இலங்கைத் தீவுக்கு ஏற்படக் கூடிய பேரழிவு போதைப்பொருள் பயன்பாட்டு அழிவுக்குச் சமானமானதே என்பது இலக்கின் உறுதியான கருத்தாகவுள்ளது.
ஆசிரியர்




