மன்னார் தீவில் தற்போது அமைக்கப்படுவதைத் தவிர புதிய காற்றாலை திட்டங்களை முன்னெடுக்காதிருப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தைத் தயாரிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கான கோரிக்கை கடிதத்தை, ஆவணமாக சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு எரிசக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணகேஸ்வரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிவிப்புக்கு அமைய, மன்னார் மாவட்டத்தில் இயங்கும் பொது அமைப்புகள், சர்வ மத அமைப்பு மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவிடம் மனுக்கள் கோரப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க, பொது அமைப்புகளிடமிருந்து கடிதம் கிடைத்துள்ளதாகவும், சர்வமத அமைப்புகள் மனுக்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மன்னார் பிரஜைகள் குழு இந்த தீர்மானத்திற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.
கோரிக்கை கடிதம் கிடைத்ததன் பின்னரே எரிசக்தி அமைச்சு கோரியுள்ள ஆவணத்தைத் தயார் செய்து அனுப்ப முடியும் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.



