தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, நேற்று சூறாவளியாக வலுப்பெற்றுள்ளது. ‘மொன்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புலயலானது திங்கட்கிழமை (27) காலை 8 மணியளவில், முல்லைத்தீவுக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இது வட-வடமேற்கு நோக்கி நகர்ந்து, செவ்வாய்கிழமை (28) கடுமையான சூறாவளியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இப்புயலானது இன்று மாலை ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் மற்றும் கடற்படையினர் மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலாபத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளிலும், காலி முதல் அம்பாந்தோட்டை வழியாகப் பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை வரையான நிலைவரத்தின் அடிப்படையில் சீரற்ற காலநிலையால் குருணாகல், புத்தளம், அநுராதபுரம், பதுளை, மொனராகலை, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் 7945 குடும்பங்களைச் சேர்ந்த 31 628 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 5 வீடுகள் முழுமையாகவும், 847 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.



