அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரித்தானியா வாழ் இலங்கையர்கள் சந்திப்பு

இலங்கையின் அமைச்சர்களான நளிந்த  ஜயதிஸ்ஸ, சரோஜா சாவித்திரி  போல் ராஜ், மற்றும் ஹர்ஷன நாணயக்கார  ஆகியோர் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னருடன் இணைந்து பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் நேற்று (26) பிற்பகல் லண்டனை சென்றடைந்துள்ளனர். அங்கு அவர்கள் இலங்கை சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியின் கிளை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், அரசியல் சார்பின்றி பெருமளவிலான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் கலந்து கொண்டனர் என்று அரசாங்கத் தரப்பு தெரிவிக்கிறது.

இலங்கை சமூக உறுப்பினர்கள், அரசின் முன்னேற்றம், பொருளாதாரக் கொள்கைகள், தேசிய பிரச்சினை மற்றும் தமிழர், முஸ்லிம் சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அமைச்சர்களிடம் நேரடியான கேள்விகளை எழுப்பினர்.

அமைச்சர்கள் அதற்கு பதிலளிக்கும்போது, இதுவரை அரசாங்கம் மேற்கொண்ட அரசியல் சீர்திருத்தங்கள், மக்களுக்கு வழங்கப்பட்ட பொருளாதார நிவாரணங்கள், மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்த முயற்சிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கியுள்ளனர்.