மட்டக்களப்பு மாவட்டத்தில் மீனவர்களின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் மீனவர் சங்கங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் வடக்கு, கிழக்கு மீனவர் தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிழக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கத்தின் தலைவர் ரத்தினம் பத்மநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வெய்ஸ்ஒப் மீடியா கற்கை நிலையத்தில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற ஊடக மாநாட்டில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட மீனவர் சங்கத்தின் தலைவரும் கிழக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கத்தின் தலைவருமான இரத்தினம் பத்மநாதன், பாலமீன்மடு திராய்மடு மீனவர் கூட்டுறவு சங்க செயலாளர் ஜெயந்தீஸ் ரூபசேன ஆகியோர் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கடந்த காலத்தில் மீன்பிடி அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன மட்டக்களப்பு மாவட்டத்தில் பல மில்லியன் ரூபா செலவில் கல்லாறு, காத்தான்குடி, பாலமீன்மடு, களுவங்கேணி கடற்கரை பகுதியில் மீனவர்களின் வளர்ச்சிக்காக ஒரு மண்ணெண்ணெய் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைத்து அந்த பகுதி மீனவ சங்கங்களிடம் கையளித்தார்.
இவ்வாறு அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாலமீன்மடு, களுவங்கேணி ஆகிய இரண்டு மட்டும் இயங்கிக்கொண்டிருப்பதுடன் கல்லாறு, காத்தான்குடி ஆகிய இரண்டும் இயங்காமல் பழுதடைந்து துருப்படித்து பாழடைந்து கிடக்கின்றன.
இந்த நிலையில் பாலமீன்மடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அந்த பகுதியில் உள்ள வில் 300 படகுகளுக்கு மேற்பட்ட படகுகள் பயன்பெற்று வருகின்றது. அதேபோல் களுவங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் அந்த பகுதி படகுகளை சேர்ந்த மீனவர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.
நான் தலைவராக இருந்தபோது தான் தரப்பட்டது. இதனை நாங்கள் தனிநபர் ஒருவருக்கு குத்தகைக்கு கொடுத்து அதில் வரும் வருவாயில் மீனவர் குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்தால் மரண செலவுக்கு பணம் வழங்கி வருகின்றோம் அதுமட்டுமல்ல பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சிக்காக பணம் வழங்கி வருகின்றோம்.
பாலமீன்மடு ஒரு பெரிய கிராமம். அங்கு ஒரு மாதத்தில் 3 மரணச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. ஒரு மரணச்சடங்கிற்கு 10 ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டியுள்ளது. இவ்வாறான நிலையில் மீனவர் சங்கத்துக்கு வருவாயாக வரும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை பறித்து மீனவர்களின் வயிற்றில் அடித்து பிரதேச சபைக்கு வழங்குவதற்கு சிலர் நாசகார வேலை செய்துவரும் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.
மத்திய அரசில் இருந்து வழங்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எங்கள் கையில் இருந்து பறிபோகுமானால் நாங்கள் கிழக்கு மாகாணம் மட்டுமல்ல, வடக்கு மாகாண மீனவர் தொழிற்சங்கமும் ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.



