சீரற்ற வானிலையால் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சீரற்ற வானிலையால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். 481 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், 02 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, நாட்டின் 11 மாவட்டங்களுக்காக முன்னதாக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, களுத்துறை, கொழும்பு, காலி, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மண்மேடு சரிவு மற்றும் கற்பாறைகள் உருண்டு விழும் அபாயங்கள் நிலவுவதால், அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனர்த்த நிலைமைகள் குறித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.