88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சிறைச்சாலைகளில் இருந்தவர்கள் இன்று அமைச்சர்களாக உள்ளார்கள். எமது பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டுகிறோம்.எமக்கு ஏதும் நேர்ந்தால் அரசாங்கம் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2451/ 10 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை மற்றும் (52ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்த, வெலிகம பிரதேச சபையின் தலைவர் பகிரங்கமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கடந்த காலங்கள் பற்றி தற்போது சமூக வலைத்தளங்களில் பல விடயங்கள் பரிமாற்றப்படுகின்றன. 88 மற்றும் 89 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சிறைச்சாலைகளில் இருந்தவர்கள் இன்று அமைச்சர்களாக உள்ளார்கள். எமது பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்டுகிறோம்.எமக்கு ஏதும் நேர்ந்தால் அரசாங்கம் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு மீதான வரியை விதிக்குமாறு மூன்று மாதங்களுக்கு முன்னரே நான் குறிப்பிட்டேன். காலநிலை சீர்கேட்டுக்கு மத்தியில் அரசாங்கம் தற்போது வரி விதித்துள்ளது. இதனால் விவசாயிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தான் அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கிறது.
பொன்னி சம்பா மற்றும் பிறிதொரு வகையான அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு இணக்கமாக வர்த்தகர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஐந்து நாட்களுக்குள் இந்தியாவில் இருந்து கொழும்புத் துறைமுகத்துக்கு அரிசி தொகை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதிலும் ஒரு முறைகேடு இடம்பெற்றுள்ளது. வர்த்தக அமைச்சருக்கு இணக்கமானவர்களுக்கு மாத்திரமே அரிசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மதுபானங்களுக்கு வரி விதிப்பது பற்றி தற்போது பேசப்படுகிறது. வரி பெறுவதாயின் முதலில் மக்கள் மதுபானம் அருந்த வேண்டும். அதிவிசேசம் சாரய போத்தல் ஒன்றின் விலை 4600 ரூபாய், எவ்வாறு மது அருந்துவது. ஆகவே வரியை பெற வேண்டுமாயின் அனைவரும் மதுபானம் அருந்த வேண்டும். மதுபான போத்தல் ஒன்றின் விலையை 2500 ரூபாவாக குறைக்குமாறு நான் கடந்த அரசாங்கத்திலும் யோசனை முன்வைத்தேன்.ஆனால் ஏதும் நடக்கவில்லை. இன்று கிராமங்களில் கசிப்பு உற்பத்தி தீவிரமடைந்துள்ளது.ஆகவே மதுபானங்களின் விலைகளை குறையுங்கள்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க அனைவரும் ஊழல்வாதிகள், 66 சதவீதமான அரச நிறுவனங்கள் மோசடியானவை என்று குறிப்பிடுகிறார்.அனைத்து அரச நிறுவனங்களும் மோசடியாயின் அவரது இரண்டு மனைவியரும் தொழில் புரிந்த இலங்கை மத்திய வங்கி மோசடியில்லையா, ஆகவே யார் மோசடி, எந்த நிறுவனம் மோசடியானது என்பதை பணிப்பாளர் நாயகம் பெயர் விபரத்துடன் வெளியிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்