வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை…

முதலமைச்சர் வேட்பாளர் யார் என பிரதான கட்சிகள் தீவிர ஆலோசனை நடாத்தி வரும் நிலையில்,
வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பிலும் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன.

அந்த வகையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி, 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின் கீழ் களமிறங்கவுள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது பற்றி தேசிய மக்கள் சக்தி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. உத்தேச முதலமைச்சர் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலனின் பெயர் முன்னணியில் இருப்பதாகத் தெரியவருகின்றது. ஏனைய சிலரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது இவர், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண முதலமைச்சரைத் தெரிவு செய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.