பிரதமரின் இந்திய பயணம் குறித்து அலி சப்ரி பாராட்டு!

அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயம் பரவலாக வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச அரங்கில் எமது நாடு தெளிவுடனும் கௌரவத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் அண்மைய இந்திய விஜயம் வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருக்கின்றது. தான் கல்வி பயின்ற புதுடில்லியின் தேசிய பல்கலைக்கழகத்திலும் என்.டி.ரி.வியின் உலகத்தலைவர் மாநாட்டிலும் பிரதமர் ஆற்றிய உரையானது ஆழமானதாகவும், அறிவுபூர்வமானதாகவும், இலங்கையின் மிகச்சிறந்த தலைமைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது. எமது நாடு அத்தகையதொரு தெளிவுடனும், கௌரவத்துடனும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

அதேபோன்று தீவிர நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு உதவிய மிக்கடினமான முறையில் வென்றெடுக்கப்பட்ட பொருளாதார அடைவுகள் மற்றும் ஸ்திரமான வெளியுறவுக்கொள்கை என்பவற்றில் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வதில்லை என்ற அரசாங்கத்தின் தீர்மானமும் ஊக்கமளிக்கின்றது. எம்மால் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டுவரும் சுதந்திரமானதும், எந்தவொரு தரப்பினரையும் சாராத போதிலும் நடைமுறைக்குச் சாத்தியமானதுமான வெளியுறவுக்கொள்கை தொடர்ந்து எமக்குச் சாதகமானதாக அமையும்.

நிதியியல் ஒழுக்கம், வருமான ஒருங்கிணைப்பு, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் மறுசீரமைப்பு, செலவினங்களை ஈடுசெய்யக்கூடிய விலையிடல் முறைமை, இலக்கிடப்பட்ட சமூகப்பாதுகாப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என்பன சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணையளிக்கப்படும் மீட்சிக்கான செயற்திட்டத்தின் அடிப்படைகளாக அமைந்துள்ளன. இவை தூரநோக்கு சிந்தனை மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான தன்மை என்பவற்றின் ஊடாக அணுகப்படவேண்டுமே தவிர, மறுப்புக்கொள்கையின் அடிப்படையில் கையாளப்படக்கூடாது.

அத்தோடு சட்ட மற்றும் ஒழுங்கை மீளுறுதிப்படுத்தும் அதேவேளை, ஊழல் மோசடிகளை உரியவாறு கையாள்வது இன்றியமையாததாகும். மறுபுறம் மாற்று நோக்கங்களுக்காக சட்ட அமுலாக்கம் தவறான முறையில் பயன்படுத்தப்படக்கூடாது. பெரும்பாலான இலங்கையர்களைப் பொறுத்தமட்டில் யார் நாட்டை ஆள்கின்றார்கள் என்பதை விட, நேர்மை, இலக்கு, பொறுப்புக்கூறல், ஒழுக்கம் மற்றும் சகலரையும் உள்ளடக்கிய தன்மை என்பவற்றுடன் எவ்வாறு நாட்டை ஆள்கின்றார்கள் என்பதே முக்கியமானதாக இருக்கின்றது. எனவே அதற்கேற்றவாறு கௌரவம் மற்றும் ஒற்றுமையுடன் இலங்கை முன்நோக்கிப் பயணிக்கும் என எதிர்பார்க்கின்றோம் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.