பிரதமர் ஹரிணி, ஜே.வி.பி, இராஜதந்திரம் : விதுரன் 

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அண்மைய சீனா மற்றும் இந்தியாவுக்கான தொடர் விஜயங்கள், இந்து சமுத்திரப் பிராந்தியத் தில் நிலவும் புவிசார் அரசியல் போட்டிச்சூழலில் அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நுட்ப மான முறையில் ‘சமநிலை இராஜதந்திரத்தை’ காண்பிப்பதாக உள்ளது.
அதுமட்டுமன்றி பிரதமர் அமரசூரியவின் சீன, இந்திய பயணங்கள், இலங்கையின் பொருளா தார மீட்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், தற்போதைய அரசாங்கத்தை வழிநடத்தும் ஜே.வி.பி.க்குள் ஒரு மாற்றுத்தலைமைத்துவத்தை கட்டி யெழுப்பும் முயற்சிகளாகவும் பார்க்கப்படுகின் றன.
பிரதமர் அமரசூரியவால் ஒக்டோபர் 13-14 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீன விஜயத்தின்போது, பிரதமர் ஹரிணி அமரசூரியவு க்கு, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரதமர் லீ கியாங் மற்றும் வாங் ஹுனிங் ஆகியோருடனான சந்திப்புக்களை நடத்துவதற்கான வாய்ப்புக் கிடைத்திருந்தது.
அரசாங்கத்தின் பிரதான அதிகார மைய மாகக் கருதப்படும் ஜே.வி.பியின் பொதுச் செய லாளர் டில்வின் சில்வாவுக்கு இச்சந்திப்புகள் கிடைக்காத நிலையில், பிரதமருக்கு அளிக்கப்பட்ட இந்த உயர்மட்ட வரவேற்பு கவனிக்கத்தக்கது.
சீனப் பிரதமருடனான கலந்துரையாடல் களின் போது, இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சீனா தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாகவும், மண்டலம் மற்றும் பாதை முன்முயற்சியின் (பி.ஆர்.ஐ) கீழ் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் உறுதி யளிக்கப்பட்டது.  இதற்குப் பதிலடியாக, பிரதமர் அமரசூரிய இலங்கையின் மிக முக்கியமான இராஜதந்திர நிலைப்பாடாக, சீனாவின் ‘ஒரு சீனா கொள்கைக்கு’ (One China Policy) தனது அரசாங்கத்தின் திடமான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதாக குறிப்பிட் டார்.
மேலும், ஸிஸாங் மற்றும் ஷின்ஜியாங் விவகாரங்களில் சீனாவுக்குச் சார்பான நிலைப் பாட்டை எடுத்தமை, பொருளாதாரத் தேவைகளுக் காகச் சீனாவிடமிருந்து அரசியல் ஆதரவைப் பெறும் இலங்கையின் அவசியத்தை கடந்து, ‘அதி காரப்பகிர்வு’ சம்பந்தமாக பாரிய கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.
தமிழர்களைப் பொறுத்தவரையில் ஏழு தசாப்தமாக ‘அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு தேவை’ என்பதற்காக போராட்ட வடிவங்களை மாற்றி இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இடதுசாரித்துவ சித்தாந்தக் கட்சியாக இருந்தாலும் ஜே.வி.பி. சிங்கள தேசியவாதத்திற் குள் மூழ்கித்திளைத்திருக்கும் சக்தியொன்று தான். அத்தகைய கட்டமைப்புக்குள் பிரதமர் அமரசூரிய போன்றவர்கள் ‘புதிய லிபரல்வாத நிலைப்பாடுடையவர்கள்’ என்றே காண்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
அத்தகைய நிலையில், பிரதமர் அமசூரி யவே, ஒரு சீனக்கொள்கையை ஆதரித்து நிற்பதும், ஸிஸாங் மற்றும் ஷின்ஜியாங் விவகாரங்கள் சீன மத்திய அரசாங்கத்தினை ஆதரித்திருப்பதும் வெறு மனே சீனாவை சாந்தப்படுத்துவதற்கு அப்பால் ஆழமாக கவனிக்க வேண்டிய விடயமாகின்றது.
இதேநேரம்,  சீனாவின் ஆராய்ச்சிக்கப் பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி கோருவது தொடர்பான விடயத்தில் இலங்கை இன்னும் தீர்க்கமான முடிவை எடுக்காமல் தவிர்த்து வருகின்றது. இந்த நிலைமையானது இந்தியாவுடனான பாதுகாப்பு அக்கறைகளில் இலங்கை அதிகமாக கரிசனைகளைக் கொண்டி ருப்பதாக காண்பிக்கும் செயற்பாடொன்றாகும்.
அத்தகைய சூழலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய சீன விஜயத்தினை நிறைவு செய்து கொண்டு வெறும் 12 மணித்தியாலங்களுக் குள்ளேயே  இந்தியாவுக்குப் பயணம் மேற் கொண்டது, பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு இந்தியா வின் இன்றியமையாத பங்களிப்பை இலங்கை ஏற்றுக்கொள்வதைப் பிரதிபலிப்பதாக வெளிப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடைபெற்ற சந்திப்பில், கல்வி, ஆளணி அபி விருத்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், டிஜிட்டல் நிர்வாகத்தை வலுப்படுத்துதல் போன்ற மக்கள் நலன் சார்ந்த துறைகளில் இந்தியாவின் ஆதரவு குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக, பிரதமர் அமரசூரிய டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு விஜ யம் செய்து, தனது பழைய நினைவுகளை மீட் டெடுத்ததும், தனது பெயரை ஆய்வகத்திற்குச் சூட்டியதும், இராஜதந்திர உறவுகளுக்கு அப்பாற் பட்ட தனிப்பட்ட மற்றும் கலாசாரப் பிணைப்பை வலுப்படுத்தும் இந்தியாவின் தந்திரோபாய அணுகுமுறையை (People-Centric Diplomacy) வெளிப் படுத்துகிறது.
இதேபோல, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஆகியோர் சந்தித்து, மலையக மக்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் வெற்றியைப் பற்றிப் பேசியமை, இந்தியாவின் இராஜதந்திரம் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவுவதை காண் பிப்பதாக உள்ளது
பிரதமரின் இந்த விஜயங்களின் மிக முக்கியமான தாக்கம், ஜே.வி.பி.யின் ஆதிக்கத்திலு ள்ள உள்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருக்கும் சல சலப்பாகும்.  விசேடமாக தேசிய மக்கள் சக்தியின் ஊடாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஆனால் ஜே.வி.பி.யின் அடிப்படை உறுப்பினரல்லாத ஒருவராகவே ஹரிணி அமரசூரிய காணப்படுகின் றார்.
அவர், அமெரிக்காவிலும் இந்தியாவிலும் கல்வி பயின்று, மேற்குலக நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதன் காரணமாக, ஜே.வி.பி.யின் அடிப்படை உறுப்பினர்கள் மத்தி யில் ‘ஏகாதிபத்தியவாதத்துக்கு சார்பானவர்’ என்று சந்தேகிக்கப்படுகின்ற நிலைமைகள் உள்ளன.
அதுமட்டுமன்றி, அண்மைய காலத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் ஏனைய மேற்கு லத்தினரும் ஹரிணியை வைத்து காய்நகர்த்துவதில் பெரும் பிரயத்தனம் காண்பித்திருந்தனர் என்பது வெளிப்படையான விடயம்.
இவ்வாறான நிலையில், தற்போது சர்வ தேச அரங்கில் ஹரிணி அமரசூரியவுக்குக் கிடைத்த அதிகப்படியான அங்கீகாரமும், வரவேற்பும், அரசாங்கத்தை பின்னால் இருந்து இயக்கும் டில்வின் சில்வாவுக்குச் சவாலான நிலைமைகளை தோற்றுவித்துள்ளமை மறுதலிக்க முடியாத விடயம்.
ஆனால், டில்வினைப் பொறுத்தவரையில் சர்வதேச அரங்கை தமக்குச் சாதகமாகப் பயன் படுத்துவதற்கு அநுரகுமார தலைமையிலான அரச பிரதிநிதிகளை தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளார். அந்தக் காய்நகர்த்தலின் ஒரு அங்கமாக பிரதமர் அமரசூரியாவின் விஜயம் அமைந்திருக்குமானால் அவர் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளவே முனைவார்.
ஒருவேளை, டில்வினின் அரசியல் கணக்கிற்கு அப்பால் பிரதமர் அமரசூரியவின் ‘புத்திசாலித்தனமான நகர்வுகள்’ காணப்படுமாக இருந்தால் பதவியிலிருந்து ஹரிணி அமரசூரிய நீக்கப்படலாம் என்ற ஏற்கனவே இருந்த வதந்திகள் பொய்த்துவிடும்.
அண்மையில், அமைச்சரவை மாற்றம் குறித்துக் கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, பிமல் ரத்நாயக் கவுக்கு ‘இதைவிட இன்னும் பெரிய பொறுப்பு விரைவில் வழங்கப்படும்’ என்று கூறியிருந்தார், அப்பதவி பிரதமர் பதவியாக இருக் கக்கூடும் என்ற ஊகம் அனைவர் மத்தியிலும் உள்ளது.
ஜே.வி.பி. தனது நம்பிக்கைக்கு அப்பாற் பட்ட ஒருவரிடம் அதிகாரத்தைத் தக்க வைத் துக் கொள்ள விரும்பாது என்பது அடிப் படையான விடயம். அந்த வகையில், ஜே.வி.பி.யின் கட்டுப்பாட்டுக்குள் அப்பாற்பட்ட ஹரிணி அமரசூரியவின் சர்வதேச விஜயங்கள் இடம்பெற்றிருக்குமாக இருந்தால் அவருக்கு வெளிப்படையாக வலுவூட்டுவது போல் தோன்றி னாலும், உள்நாட்டுக் களத்தில் அவரது பதவியைப் பறிப்பதற்கான வாய்ப்புக்களையே மேலும் அதிகரித்துள்ளன.
எவ்வாறாயினும், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தற்போதைய இராஜதந்திரப் பயணங்கள், இலங்கை புவிசார் அரசியல் போட்டி யைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் நிலை யையும் வெளிப்படுத்தியுள்ளது.
சீனாவுக்கான அரசியல் ஆதரவையும், இந்தியாவுடனான நெருக்கத்தையும் ஒரே நேரத்தில் பிரதமர் அமரசூரிய இலாவகமாகக் கையாண்ட விதம், உள்நாட்டு அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளைக்  கொண்டிருந்தாலும், ஜே.வி.பியின் காய்நகர்த்தலுக் குள் இராஜதந்திர தரப்புக்கள் சிக்கிவிட்டனவா என்ற கேள்விகளையும் எழுப்பாமில்லை.