ஈழத்தமிழர்களை ஒன்றுசேர்ந்து போராட அழைக்கிறது 2025ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 361

இஸ்ரேல் பாகிஸ்தான் கம்போடியா பிரதமர்கள் அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு அமைதிக் கான 2025ம் ஆண்டு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டுமென்று முன்மொழிந்த   நிலையில், மொத்தம் 244 தனியாட்களும் 94 அமைப்புக்களுமாக 338  வேட்பாளர்களாக இருந்த சூழலில்,  வெனிசுலாவில் கால் நூற்றாண்டுண்டுக்கு மேலாகத் தளராது சனநாய ஆட்சியை உறுதிப்படுத்தப்  போராடி வருபவரும்,  இவ்வாண்டு அக்டோபர் 7ம் திகதியுடன் 58 வயது நிரம்பியவருமான மரியா கொரினா மச்சடோ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் சனநாயக அரசாங்கமென்ற போர்வையில் 1991 முதல் கியூகோ சாவேசும் 2013 முதல் இன்றுவரை நிக்கோலஸ் மதுரோவும் பாராளுமன்ற சர்வாதிகார ஆட்சி நடாத்துகின்றார்களென இந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக, ‘இன்டஸ்ரியல் பொறியியலாளரான மச்சடோ  “நம் குழந்தைகளுக்காக! பசியும் பயமும் இல்லாத வெனிசுலாவுக்காக” என்ற தொனிப்பொருளுடன் 1992 இல், ‘வீதியில் வாழும் குழந்தைகளுக்கான’ அடீனியா அறக்கட்டளையை நிறுவி, கையில் மரியன்னையின் செபமாலையை ஏந்தியவாறு ஆன்மவிடுதலை போராட்டத்தையும் சமுக விடுதலைப் போராட்டத்தையும் ஒருங்கே தொடங்கினார். 2002 இல் ‘சனநாயகத்தினைச் சீர்திருத்தங்கள் மூலமாக அல்ல முற்று முழுதான ஆட்சி மாற்றத்தின் மூலம்  உறுதிப்படுத்த வேண்டும். சனநாயகம் அமைதிக்கான முன்நிபந்தனை, சுதந்திரம் வழங்கப்படுகிற ஒன்றாக மாற்றப்பட விடக்கூடாது,  எதிர்க்கட்சிகள் உட்பட மக்களை ஒன்றாகச் சேர்த்துப் போராடுவதன் மூலம் உண்மையான சனநாயகத்தை  அடைய வேண்டும்’ என்னும்  தெளிவான சிந்தனைகளுடன் அரசியல் விடுதலைப் போராட்டத்தை மச்சடோ முன்னெடுத்தார்.  ஸ்பானிய மொழியில் “ஒன்றாகச் சேர்த்தல்” என்னும் பொருள் தரும் ‘சொமாட்டோ’  என்னும் பெயரையே தனது அரசியல் கட்சிக்கான பெயராகவும் அமைத்துக் கொண்டார். ‘துப்பாக்கிச் சன்னங்களை வாக்குகளால் வெல்லுதல்’ தனது போராட்ட முறைமை (It is a choice of ballots over bullets) என்ற உள்ள உறுதியுடன் அரசியல் களமிறங்கிய மச்சாடோ, தனது  ‘சொமாட்டோ’ அமைப்பின் மூலம்  செயற்பாட்டுத் திட்டங்களையும் பயிற்சிகளையும்  உருவாக்கி தேர்தல்களை நேர்மையான முறையில் நடத்துவிக்கும் கண்காணிப்பாளர்களாக மக்களையே உருவாக்கினார். இதுவே இவரை 2010 இல்   வெனிசுலாவின் தேசிய சபைக்கு மக்களைத் தெரிவு செய்ய வைத்தது. ஆயினும் 2014இல் ஆளுங்கட்சியால் தேசிய சபையிலிருந்து இவர் வெளியேற்றப்பட்டு 15 ஆண்டுகள் தேர்தல்களில் போட்டியிடத் தடையும் பெற்றார்.  ஆயினும் தளராது  2024 அரசத்தலைவர் தேர்தலில் எட்மண்டோ கொன்சாலஸ் அவர்களுக்கு மச்சோடா ஆதரவு அளித்து அவர் 92 வீதமான வாக்குகளைப் பெற்றார் என இவரது”சொமாட்டோ” குடிசார் அமைப்புக்கள் தமது தேர்தல் கண்காணிப்புக்கள் மூலம் உறுதி செய்தன.  ஆயினும் நிக்கோலஸ் மதுரோவுக்கு 51 வீத வாக்குகளும் எட்மண்டோ கொன்சாலேசுக்கு 44 வீதம் வாக்குகளும் கிடைத்தாக ஆளும் ஆட்சியாளர்கள் அறிவித்து நிக்கலோஸ் மதுரோவே ஆட்சியில் தொடரச் செய்துள்ளனர். இதனால் அன்று முதல் இன்று வரை  வெனிசுலாவில்  நீதிக்கான உண்மைக்கான மக்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆயினும் மச்சோடா உயிருக்கான இனங்காணக்கூடிய அச்சத்தால் கரந்து வாழ்ந்த நிலையில் மக்களைச் செயற்படுத்தி வருகின்றார். அதேவேளை மச்சாடோ வெனிசுலாவின் ஊழல்நிறைந்த சோசலிச பொருளாதாரத்தைச் சந்தைச் சுதந்திரத்துடன் கூடிய தனியார் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சி மூலம் மாற்றுவதைப் பொருளாதார விடுதலைக்கான பாதையாக முன்மொழிந்து வருவதால், அமெரிக்க மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெற்றவராகவும் இவர் காணப்படுகின்றார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு இவ்வாண்டில் வழங்கப்பட்டதை தனக்கானதாக இல்லாமல் தானும் ஒரு  பங்காளியாக இருக்கும் பிரமாண்டமான மக்கள் அமைப்புக்கு கிடைத்த பரிசாகவே இவர் வெளிப்படுத்தியுள்ளமை இவரின் பணியாள் தலைமைத்துவப்பண்பை உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதில் மேற்குல அரசியல் பின்னணி எப்பொழுதும் உண்டு  என்ற வழமையான விமர்சனங்களைக் கடந்து, வெனிசுலாவின் எண்ணெய் வள கனிம வள கவர்ச்சியால் உலக அரசுக்களின் அக்கறை வெனிசுலாவில் இருக்கும் நிலைகளையும் கடந்து, படைபலத்துடன் சர்வாதிகார ஆட்சியினைப் பாராளுமன்றக் கொடுங்கோன்மை ஆட்சியாக வெளிப்படுத்தும் சூழலை எதிர்கொள்ளும் மக்கள்,  எவ்வாறு சுதந்திரத்தை ‘வழங்கப்படும் ஒன்றாக மாறவிடாது மக்கள் ஒன்று சேர்ந்து அடைய வேண்டியவொன்றாக’ பெற வேண்டுமென்ற மச்சடோவின் உள்ள உறுதியும், அதனைச் செயற்படுத்துவதற்கான ஆளணிகளை அவர் உருவாக்கி  அவர் செயற்பட்டு வரும் முறைகளும், இந்த அமைதிப்பரிசு அவருக்கு ஏற்புடையது என்பதனை உறுதி செய்கிறது. அத்துடன் ஈழத்தமிழர்களுக்கும் அவர்கள் இன்று எவ்வாறு தங்கள் மேல் 77 ஆண்டுகளாகத் தொடரும் சிறிலங்காப் பாராளுமன்றக் கொடுங்கோன்மைக்கு எதிராக இன்று போராட வேண்டுமென்ற முறையியலையும் வெளிப்படுத்துகின்றது என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
வெனிசுலாவில் 33 ஆண்டுகள் சனநாயகத்தை பாதுகாக்கப் போராடுபவர்களுக்கு 2025இல் நோபல் அமைதிப் பரிசு வழங்கும் உலகம் 77 ஆண்டுகள் போராடும் ஈழத்தமிழர்களுக்கு 2025இல் சிறிலங்கா இழைத்த-இழைக்கும் இனஅழிப்புகளுக்கான அனைத்துலகச் சட்டப்பாதுகாப்புக்கும், அனைத்துலக நீதிமன்ற நீதிக்கும், இதுவரை எதுவுமே செய்யாதிருப்பதை ஈழத்தமிழர்கள் உலக மக்களுக்கு உரிய முறைகளில் வெளிப்படுத்த வேண்டுமென்பது இலக்கின் அழைப்பாகவுள்ளது.  மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்வர்கள் தொடர்பில் சிறிலங்காவுக்கான தண்டனை நீதிக்கும்  பாதிப்புற்றவர்களினதும் கிட்டிய குடும்ப உறுப்பினர்களதும் பரிகாரநீதிக்கும் ஈழத்தமிழர்களை சிறிலங்காவின் உள்ளக பொறிமுறைக்குள் பெறும்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் இவ்வாண்டில் நெறிப்படுத்தி தான் சிறீலங்காவுக்கு அதனது திட்டங்களுக்கான நிதியும் மதியும் அளிக்கும் அமைப்பாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெயரளவில் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களைத் தாங்கள் தொடர்ந்தும் இரண்டு ஆண்டுகளுக்குப் பதியப்போவதாகவும்  சிறிலங்காவை பொறுப்புகூறவைக்கும் கண்காணிப்பை மேற்கொள்ளப் போவதாகவும் கூறுவது வெளியக விசாரணைக்கு வழிசெய்யாதவரை எந்த நடைமுறை நீதியையோ அல்லது பரிகாரத்தையோ ஏற்படுத்தாது என்பதே உண்மை.
மேலும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அழித்தலுக்கான படைப்பாக்கத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிகளை ஏற்படுத்துவதற்கான கொள்கையினை விளக்கிய பிலிப் ஆகியான், மற்றும் பீட்டர் ஹொவிட்  ஆகியோருக்கு அரைவாசிப் பரிசும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த பொருளாதார வளரச்சிக்கான அடிப்படைக் காரணிகளை கண்டறிந்த ஜோயல் மோக்யருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு விடயங்களை ஈழத்தமிழர்கள் மனதிருத்த வேண்டும். பொருளாதார வளரச்சிகள் காலத்துடனும் இடத்துடனும் சம்பந்தப்பட்டன. எனவே இருக்கின்ற பொருளாதார முறைமைகள் தேவைக்கேற்ப அழிக்கப்பட்டுப் புதிய முறைமைகளுக்கு இடங்கொடுக்கப்பட்டாலே வளர்ச்சி ஏற்படும். அடுத்தது இந்த புதிய வளர்ச்சிக்கேற்ப தொழில்நுட்ப அறிவினை வளர்த்தலும் கருவிகளைப் பெறுதல் அல்லது உருவாக்கலும் முக்கியம்.
அவ்வாறே இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய படைப்பாளரான லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் அவர்களுக்கு வழங்கப்பட்ட பொழுது அவரின் நாவல்கள் ஊழிக்கால பேரழிவுகளை புலம்பலாக இல்லாமல் உணர்வு பூர்வமாகப் பயங்கரவாதத்திற்கு மத்தியிலும் கலைத்துவ உயிர்ப்புடன் பதிவுசெய்துள்ளமைக்கும், அவருடைய நாவல்கள் முற்றுப்புள்ளி இடப்படாத மிக மிக நீண்ட நாவல்களாக கருத்துக்களை வளர்க்க அமைந்து படைப்பின் ஆழத்தை வெளிப்படுத்திய தனித்துவ நடைக்காகவுமே வழங்கப்பட்டன என்ற குறிப்பு உண்டு. சிறிய வசனங்களாக படைப்புக்கள் அமைய வேண்டுமெனவும் இலக்கண பிழைகளின்றி அமைய வேண்டுமெனவும் தமிழ்படைப்புலகில் நிலவும் கருத்து எவ்வளவு தவறானதென்பதை இம்முறை இலக்கிய நோபல் பரிசு தமிழருக்கு உணர்த்தியுள்ளது. இவரின் Herscht 07769 என்னும் நாவல் 400 பக்கங்கள் கொண்டது. ஆனால் அரைத்தரிப்புக்களாலேயே படைக்கப்பட்டு 400 பக்கங்களுக்குப் பின்னரே முற்றுப்புள்ளி இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படைப்பாளரின் சுதந்திரத்தை தாங்கள் நினைத்த மாதிரி பிச்செடுக்கும் பழக்கம் உள்ளவர்களாக ஈழத்து மரபு மற்றும் தூய்மையை மொழியில் பேணுபவர்களுக்கு உலகம் எவ்வாறு எதனை மதிக்கிறது என்பதை இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு தெளிவாக்கியுள்ளது. இவ்வாறே மருத்துவ வேதியல் இயற்பியல் நோபல் பரிசுகளும் உலகம் தொழில்நுட்ப எழுச்சிகளுக்கும் பொருளாதார வளர்ச்சிகளுக்கும் எவ்வாறு முதலிடம் கொடுக்கின்றன என்பதைத் தெளிவாக்குகின்றன. ஈழத்தமிழர்கள் இவற்றை கவனத்தில் எடுத்து உலக நடையறிந்து ஒழுகுதல் என்னும் ஒப்புரவு தன்மையில் தங்களை வளர்த்து ஊடகத்துறையில் இலக்கியத்துறையில் அதனை நிலைநிறுத்தினாலே ஈழத்தமிழர்களின் வாழ்வின் எதார்த்தத்தை உலகம் கண்டு அவர்களுக்கான விடுதலை வாழ்வில் கைகொடுக்கும் என்பது இலக்கின் இவ்வாரக்கருத்தாகவுள்ளது.
ஆசிரியர்

Tamil News