சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த செயற்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கும் நோக்கில், உயர் மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து, சட்டபூர்வமான மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, புல்மோட்டை, கொக்கிளாய், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி மேற்கு போன்ற பகுதிகளை இலக்கு வைத்து, ஒரு சிறு குழுவினரால் மேற்கொள்ளப்படும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மற்றும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் போன்ற சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான உபாயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதேநேரம் அந்தந்த மாவட்டங்களின் உதவிப் பணிப்பாளர்கள் தமது பிரதேசங்களில் நிலவும் கள நிலவரங்கள் குறித்தும் விளக்கமளித்தனர். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், “சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒரு சிறு குழுவினரால், ஆயிரக்கணக்கான சட்டபூர்வமான மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த, கடற்படை, பொலிஸ் மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஒன்றிணைந்து, அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைகளையும் விசேட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
அதற்கு இணையாக, சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவான விழிப்புணர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.