திருகோணமலையில் சுமார் 72 சதவீத மக்கள் இன்னும் போதுமான சத்தான உணவைப் பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து உணவு பாதுகாப்பையும் சத்துணவையும் உறுதி செய்ய பாடுபட வேண்டும் என எகெட் கரித்தாஸ் (EHED Caritas) நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை போல் றொபின்சன் தெரிவித்தார்.
2025 அக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினத்தை முன்னிட்டு, திருகோணமலை EHED Caritas நிறுவனம் மற்றும் திருகோணமலை மாவட்ட விவசாய திணைக்களம் இணைந்து அலஸ் தோட்டம் தீபம் வளவாளர் நிலையத்தில் நிகழ்வொன்று இடம்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே எகெட் கரித்தாஸ் (EHED Caritas) நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை போல் றொபின்சன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சி அலஸ்தோட்டம் இறை இரக்க வலயத்திலிருந்து தீபம் வளவாளர் நிலையம் வரை நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்துடன் தொடங்கியது.
இந் ஊர்வலத்தில் EHED Caritas நிறுவன ஊழியர்கள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், இணைப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் இரு நிறுவனங்களின் பயனாளிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக EHED Caritas நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை போல் றொபின்சன், திருகோணமலை மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதிநிதியாக துஸாந்தினி, உப்புவெளி சிரேஸ்ட சுகாதார பரிசோதகர் எஸ். சியாம் சுந்தர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர் எஸ். யோகேந்திரன், மற்றும் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அருட்தந்தை போல் றொபின்சன் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
“ திருகோணமலையில் சுமார் 72 சதவீத மக்கள் இன்னும் போதுமான சத்தான உணவைப் பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து உணவுப் பாதுகாப்பையும் சத்துணவையும் உறுதி செய்ய பாடுபட வேண்டும்”.
மேலும், உணவு வீணாவதைத் தவிர்க்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், பசுமைச் சூழலை ஊக்குவிக்கும் நிலைத்தொழில்முறைகளைப் பின்பற்றவும் அனைவரும் உறுதியாக செயல்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வளவாளர்களின் வழிகாட்டலுடன் உணவு பாதுகாப்பு, சத்தான உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தொழில்முறை விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு அமர்வுகள் நடத்தப்பட்டன.
வளவாளர்களாக எஸ். யோகேந்திரன், துஸாந்தினி, மற்றும் எஸ். சியாம் சுந்தர் ஆகியோர் தங்கள் துறைக்கேற்ற அறிவுரைகளை வழங்கினர். அவர்களின் உரைகள் பங்கேற்பாளர்களுக்கு புதிய அறிவையும் ஊக்கத்தையும் அளித்தன.
நிகழ்ச்சி நிறைவில் பங்கேற்ற அனைத்து விருந்தினர்களுக்கும், வளவாளர்களுக்கும் மற்றும் பயனாளிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. “எதிர்காலத்தின் சிறந்த உணவிற்காக கைகோர்ப்போம்” என்ற கோஷத்துடன் உலக உணவு தினம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.