இனவாதத்தால் மலையக அதிகார சபையை  மூட சூழ்ச்சி : மருதன் ராம்

பெருந்தோட்ட மக்களுக்காக உள்ள அரச அமைப்புகளில் முக்கிய இடம் வகிக்கும்  மலையக அதிகார சபை என்ற பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீள்கிறது. இந்த அதிகார சபையை இல்லாமல் செய்யும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்தரப்பினர் தொடர்ச்சியாக குற்றம் சாட்டுகின்றனர்.
எனினும் மறுபுறம் அவ்வாறான எவ்வித செயற்பாடுகளும் இடம் பெறவில்லை என்று அரசாங்கமும் சில அரச அதிகாரிகளும் கூறி வருகின்றனர். எவ்வாறாயினும் இந்த விடயம் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தீர்வின்றி நீண்டு செல்கின்றன. பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்களை இந்நாட்டின் சம உரிமை அனுபவிக்கும் பிரஜைகளாக மாற்றும் நோக்கத்துடன் பழனி திகாம்பரம் அமைச்சராக இருந்தபோது 2018இன் இறுதிக் காலப்பகுதியில் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் இந்த அதிகார சபை உருவாக்கப்பட்டது.
எனினும் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மூடிவிடும் அரசாங்கத்தின் தீர்மானத்தில் மலையக அதிகாரசபையும் உள்வாங்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர்மட்ட நிர்வாக உத்தியோகத்தர்களைக் கொண்ட ஒரு குழு டிசம்பர் 2024இல் நியமிக்கப்பட்டது.
இக்குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப் பட்டிருக்கின்றது. இதற்கு மலையக அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் மலையக அதிகாரசபை மூடப்படக்கூடாது என்றும் அது மலையக பெருந்தோட்ட மக்களின் உரிமைக்காக செயற்படும் ஒரு அமைப்பு என்றும் வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் முன்னதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்தக் கடிதத்தில் மலையக அதிகார சபையின் தேவை, அதனூடாக பெருந்தோட்ட மக்களுக்கு ஆற்றப்படும் பணி மற்றும் அதன் உருவாக்கத்தில் காணப்பட்ட சிக்கல்கள் உள்ளிட்ட பல விடயங்களை தெளிவுபடுத்தி இந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் குறித்த கடிதத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை பாராளுமன்ற உறுப்பி னர் மனோ கணேசன் தமது சமூக ஊடக பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இதன்படி, “இந்த மலையக அதிகாரசபை பற்றிய (under review) மீளாய்வு நடைபெறுகிறது” என்று ஜனாதிபதியின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை தாம் அறியப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மனோ கணேசனுக்கு பதில் அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும் அரசாங்கத்தின் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இடையே பாராளுமன்றில் வாதபிரதிவாதங்கள் இடம் பெற்றிருந்தன. மலையக அபிவிருத்தி அதிகார சபை இல்லாதொழிக்கப்படாதென்றும் அது தொடர்பில் அரசாங்கம் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த அதிகார சபையை விரிவாக்கம் செய்து முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத் தின் தீர்மானம். மலையக மக்களையும் அவர் களுக்கான நிறுவனங்களையும் அரசாங்கம் பாதுகாக்கும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார். பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான குழுவில் மேற்படி அதிகார சபையை மேலும் விரிவு படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதே தவிர, அதனை இல்லாதொழிக்கும் தீர்மானம் எடுக்கப்பட வில்லை.
அந்த வகையில் மலையக அபிவிருத்தி அதிகார சபை எந்த வகையிலும் இல்லா தொழிக்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதன்போது குறுக்கீடு செய்து கருத்து தெரிவித்த மனோ கணேசன் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தாலும் ஜனாதிபதி தனக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறித்த அதிகாரசபை தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாக குறிப் பிட்டுள்ளதாகவும் அவ்வாறானால் சம்பந் தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் இது தொடர்பில் முறையாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மீண்டும் அதற்கு பதிலளித்த அமைச்சர் சந்திரசேகர் மலையக அதிகார சபையை இல்லா தொழிக்கப்போவதில்லை  என்பது அரசாங்கத்தின் தீர்மானமாகும். அந்த வகையில் அதை விரிவாக்கம் செய்து முன்னெடுத்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
அதை விடுத்து மனோ கணேசன் கூறுவது போன்று, பொதுப் பிரச்சினைகள் காணப்பட் டால் அது தொடர்பில் நாம் உரிய கவனம் செலுத்தி பேச முடியும் என்றும் தெரிவித்தார். கடந்த காலங்களில் மாற்றங்களை ஏற்படுத் தக்கூடிய பல விடயங்கள் இருந்தும் அதனை மேற்கொள்ள முடியாமற் போயுள்ளது. எனினும், “நாம் மலையக மக்களுக்கு சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனம் இருக்குமானால்  எந்த விதத்திலும் அதனை இல்லாதொழிக்கப் போவதில்லை. அந்த வகையில் நாம் அவற்றை யும் பாதுகாத்து மலையக மக்களையும் பாது காப்போம்” என்பதை கூறிக்கொள்ள விரும்பு கின்றேன் என்றும் தெரிவித்தார்.
இனவாத அடிப்படையில் சூழ்ச்சி
இந்த நிலையில் மலையக அதிகார சபையை இல்லாமல் ஆக்கும் முயற்சியில் இனவாத சதி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். தாம் பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட கருத்துக்களையும் அரசாங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தமது சமூக ஊடக பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ள அவர், “ஜனாதிபதி மீளாய்வு நடைபெறுகிறது என பதில் வழங்கி விட்ட பிறகும், ஏன்? சில மலையக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் அப்படி எதுவுமே, இல்லை என்பது போல வெட்கமில்லாமல் பொய் பேச வேண்டும்” என்று தெரிவித்தார். அத்துடன் அரசாங்கத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் தொடர்பில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் போதிய தெளிவின்மை காணப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறிருக்க மலையக அதிகார சபையை முழுமையாக நீக்கி விட வேண்டும் என்ற முயற்சியில் சில அரச அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக மனோ கணேசன் தெரி வித்தார் இனவாத ரீதியாக செயல்படும் மூன்று அதிகாரிகளின் பெயர்களையும் அவர் வெளிப் படுத்தியுள்ளார். “பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, மேலதிக செயலாளர் தீப்திகா குணரத்ன, சட்ட அதிகாரி தில்ஷானி பண்டார ஆகிய மூன்று அதிகாரிகள் இனவாத கண்ணோட்டத்தில் இந்த சபையை மூடி விடுவதில் உறுதியாக இருக்கிறார்கள்” என்று அவர் பாராளுமன்றில் தெரிவித்தார்.
“இவர்கள் என்ன, அரசாங்க அமைச் சர்களை விட பலமானவர்களா? நாம் உருவாக் கும் சட்டத்தை அமுல் செய்யவே அதிகாரிகள் இருக்கிறார்கள். சட்டம், கொள்கைகளை உரு வாக்குவது, பாராளுமன்றம்” என்றும் மனோக ணேசன் சுட்டிகாட்டினார். இந்தநிலையில் அரசாங்கத்தினதும் எதிர்தரப்பில் மனோ கணேசனினதும் கருத்துக்களை அவதானத்தில் எடுக்கும் போது மலையக அதிகாரசபை விடயத்தில் சர்ச்சை நிலவுகிறது என்ற விடயம் தெளிவாகிறது. மறுபுறம் ஜனாதிபதியின் கடி தத்தின் அடிப்படையில் அந்த அதிகார சபையை முன்னோக்கி கொண்டு செல்ல அரசாங்கம் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை என்பதும் புலனாகிறது.
அத்துடன் ஜனாதிபதி உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளின் கூற்று இவ்வாறிருக்க சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சில அமைச் சர்களும் அதற்கு மாறான கருத்துக்களை வெளி யிடும்போது அரசாங்கத்துக்குள் ஒற்றுமை இல்லை என்பதும் தெரியவருகின்றது. உயரிய சபையான பாராளுமன்றத்தில் இனவாத நோக்கு டன் மலையக அதிகார சபையை இல்லாமல் செய்யும், செய்ய முயற்சிக்கும் அதிகாரிகளின் பெயர் விபரங்களும் வெளியிடப் பட்டுள்ளன.
அப்படியானால் மலையக அதிகார சபையை பாதுகாப்பதற்கு எதிர் தரப்பில் உள்ள சகல அரசியல் தலைவர்களும் ஒன்றி ணைந்து தங்களின் கோரிக்கையை முன்வைக்க வேண்டும். மறுபுறம் தங்களுக்கான உரிமைக் காக மலையக சமூகமும் அணிதிரள வேண் டும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப் பினர்களும் இவ்விடத்தில் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். சகலரும் மக்களின் பக்கம் நின்று சிந்திப்பதன் ஊடாக மக்களுக்காக சேவை யாற்றக்கூடிய மலையக அதிகார சபையை பாதுகாத்துக் கொள்ள முடியும்.