இந்திய எதிர்ப்பு கொள்கையைப் பின்பற்றிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இந்தியாவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை. மைசூர் பருப்பினைக் கூட உண்ண வேண்டாம் என இனவாதம் பரப்பி 60 000 இளைஞர், யுவதிகளை கொன்று குவித்த ஜே.வி.பி. இன்று இந்தியாவுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறது. அதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் இவர்கள் இவற்றுக்கு வெளியிட்ட எதிர்ப்பினை நினைவுபடுத்துகின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரச நிறுவனகள் ஊடாக இலாபம் கிடைக்க வேண்டுமெனில் அவற்றை தனியார் மயப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலம் காலமாக நாமும் இதனையே வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்துகின்றேன்.
கடந்த காலங்களில் நாம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்த போது ஜே.வி.பி. தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து அனைத்துக்கும் இடையூறுகளை ஏற்படுத்தின. ஆனால் இன்று வெட்கமின்றி அவர்களே இதனைக் கூறுகின்றனர்.
இந்திய எதிர்ப்பு கொள்கையைப் பின்பற்றிய இவர்கள், இந்தியாவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை.
மைசூர் பருப்பினைக் கூட உண்ண வேண்டாம் என இனவாதம் பரப்பி 60 000 இளைஞர், யுவதிகளை கொன்று குவித்த ஜே.வி.பி. இன்று இந்தியாவுடன் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறது.
நாம் இதனை எதிர்க்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் இவற்றை செய்வதற்கு இவர்கள் இடமளித்திருந்தால் இன்று மலேசியா, சிங்கப்பூரைப் போன்று சிறந்த பொருளாதார நிலைமையை அடைந்திருக்க முடியும்.
எவ்வாறிருப்பினும் அநுர தலைமையிலான ஜே.வி.பி. இப்போதாவது யதார்த்தத்தை புரிந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது ஊழல், மோசடிகள் தொடர்பில் பலரும் கைது செய்யப்படுகின்றனர்.
அவை அனைத்தும் எமது ஆட்சி காலத்தில் எம்மால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைவானதாகும்.
மாறாக இந்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. தேர்தல் காலங்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மத்திய வங்கி பிணை முறி மோசடி , பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பிலேயே இவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். ஆனால் சிறிதொரு குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவையே நாம் கைது செய்து விட்டோம் என பிரசாரம் செய்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார். தற்போது இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இனி ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அந்த செய்தியைக் கொண்டு அரசாங்கம் அதன் பிரசாரங்களை முன்னெடுக்கும்.
இவ்வாறு ஒவ்வொருவராக கைது செய்யப்படுவதும், அது தொடர்பில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதும் அரசாங்கத்தால் அரங்கேற்றப்படும் திரைப்படமாகும். இலங்கை வரலாற்றில் மிகவும் பலவீனமான அரசாங்கமே தற்போது காணப்படுகிறது என்றார்.