காற்றாலையும் மன்னார்த் தீவும்! : தாமோதரம் பிரதீவன்

மன்னார்த் தீவு மக்களால் மட்டுமல்ல தமிழர் தாயகம் முதல் தென்னிலங்கை வரையுமாகவுள்ள மனிதர்களால் பேசப்படும் விவகாரமான இந்தியாவின்  காற்றாலைத் திட்டம் தொடர்பில் பல கருத்துகளும், செய்திகளும் பரி மாறப்பட்டாலும் மன்னார் மக்களின் கோரிக் கையும் அவர்களுக்காகக் குரல் கொடுப்போரின் சிந்தனை அல்லது கோரிக்கையும் இலங்கைத் தீவின் அபிவிருத்திகளைத் தடுப்பது கிடையாது மாறாக இத் திட்டத்தில் இருக்கும் பல பாதகங் களையும் அத்தோடு மன்னார்த் தீவில் ஏலவே இத்திட்டத்தால் தாம் எதிர்நோக்கிய சவால்கள்,பிரச்சனைகள்,பாதிப்புகள் பற்றியும் தமது வாழ்வாதாரம் இயற்கையின் சமநிலை தமது இருப்பு என்பவை இத் திட்டத்தால் பாதிக்கப் படுகிறது போன்ற பல நியாயங்களைக் கூறியும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலை கவலையளிக்கிறது.
மன்னார் மக்களை நேரடியாக மிக  மோச மாக பாதித்துள்ளது இந்த காற்றாலைத் திட்டம் மாத்திரமல்ல கனிய மணல் அகழ்வும்தான் என்பது மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதையாகிப் போகிறது. இத் திட்டத்தினால் சுமார் 30 கிலோமிட்டர் நீளமும் 04 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இச் சிறிய அழகிய தீவில் வாழும் சுமார் 75000 பொதுமக்களும்,பாதிக்கப்படுகிறார்கள் இவர்களது பிரதான  வாழ்வாதாரமான மீன்பிடி பாதிக்கப்படுகிறது, பறவைகள்  பாதிக்கப்படுகிறது, ஆனாலும் இது எதையுமே கவனத்தில் கொள்ளாது இந்தத் திட் டத்தை அமுல்படுத்த நினைப்பது பாரிய தவறாகும் புதுப்பிக்கக் கூடிய ஆற்றல் ( Renewable Energy) எனும் இந்த காற்றாலைத் திட்டத்தை நாம் வரவேற்கிறோம் ஆனால் அத்திட்டத்திற் குப் பொருத்தமான இடம் எமது மன்னார் தீவு கிடையாது என்பதையும் அதனால் ஏற்படும் பாதிப் புகள் பற்றியும் தெளிவாகக் கூறியிருக்கிறோம்.
அத்தோடு இத் திட்டத்திற்காக ஏலவே இந்த மன்னார்த் தீவில் சுமார் 36 காற்றாலைகள் நிறுப்பட்டுள்ளன, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை அறிந்ததனால்தான் மீண்டும் இத் திட்டத்தில் இணைக்கப்படவுள்ள 14 காற்றாலை எனும் புதிய திட்டத்திற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிப்பதோடு எமது தரப்பு நியாயங்களையும் கூறுகிறோம் என அந்த மக்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் இத்திட்டத்திற்கு மிகவும் பொருத்தமான இடங்கள் பற்றிய ஆய்வு ஒன்றின் முடிவுகளைக் கூறிய மொரட்டுவ பல்கலைக்கழகம் இத்திட்டத்திற்கு இலங்கையில் அதிக காற்று கிடைக்கக் கூடிய கதிர்காமத்தையண்டிய சில பிரதேசங்களைப் பொருத்தமான இடங்களாகக் கூறியிருந்தும் இத்திட்டம் ஏன் மன்னார்த் தீவை நோக்கிக் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் இதன் பின்னணியிலுள்ள மிக மோசமான  அரசியல் என்ன என்பதையெல்லாம் ஆராய வேண்டியுள் ளது.
ஏனென்றால் இத்திட்டத்திற்காக மன்னாரி லுள்ள வேறு இடங்களும் தெரிவு செய்யப்படாமல் மன்னாரில் மக்கள் வாழுகின்ற பகுதியை அதற்காகத் தெரிவு செய்துள்ள விடயமும் சிந்திக்க வைக்கிறது. வெறும் 30 கிலோமீட்டர் நீளமும் 4 கிலோமீட்டர் அகலமுன் கொண்ட மன்னார் தீவில் ஒரு காற்றாலைக் கோபுரத்துக்கு சுவீகரிக் கப்படும் காணியின் அளவு 10 ஏக்கர் ஆகும். அதற்காக நிலத்தின் கீழ் சுமார் 75 அடிக்கு மேல் தோண்டப்பட்டு கொங்கிறீட் தளம்  இடப்படுகிறது இதனால் மழை காலங்களில் நீரோட்டம் தடைப்பட்டு வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயமுள்ளது.
கடந்த ஆண்டு பெய்த அதிக மழை யின் வெள்ள நீர் வடியாமல் தொடர் இடப் பெயர்வுகளும் ஏற்பட்டு மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது கரையோர மீன்பிடி முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
அதுமாத்திரமல்லாமல் மக்கள் குடியிருப் புகளுக்கு மிக அருகிலும் அவர்களது குடி யிருப்புகளுக்கு மத்தியிலும்அமைந்திருக்கும் காற் றாலைக் கோபுரத்தின் சத்தத்தால் குழந்தைகளை வைத்திருப்போர் பலர் இடம்பெயர்ந்துள்ளதையும் அறிய முடிகிறது.
இவ்வாறான பல விடயங்களினால்தான் அந்த மக்கள் தமக்கான நீதியைக் கேட்டு வீதியி லிறங்கிப் போராடுகிறார்கள், முழு மக்களின் ஆதரவுடன் மக்கள் போராட்டமே அங்கு முன் னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கப் பல மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,சுற்றுச் சூழலி யலாளர்கள், மதகுருமார்கள், அமைப்புகள் என பலர் திரண்டு ஆதரவு வழங்கி வருகின்றார்கள். இந்நிலையில் கடந்த 19.09.2025 அன்று கொழும் பில் ஜனாதிபதி செயலகம் முன்பாக ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இதில் கொழும்பைத் தளமாகக் கொண்டுள்ள மக்கள் போராட்ட முன்னணி எனும் தமிழ்,சிங்கள, முஸ்லீம் செயற்பாட்டாளர்களைக் கொண்ட அமைப்பினர், பிரஜைகள் குழு, சுற்றுச்சூழல் அமைப்புகள், மற்றும் பொதுமக்கள், என பலரது பங்குபற்றுதலுடன் சாரணர் மாவத்தையிலிருந்து பேரணியாக வந்து ஜனாதிபதி செயலகம் முன் பாகப் போராடினார்கள்.
இந்தப் போராட்டத்தின்போது அதில் ஈடுபட்டவர்களில் இருந்து 10 பேரை ஜனாதிபதி செயலகத்திற்குள் அழைத்து மேலதிக செயலாளர், ஜனாதிபதி செயலாளர், ஜனாதிபதியின் ஆலோசகர் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதில் மன்னார் மக்கள் சார்பில் அறிக்கைகளும் வழங்கப்பட்ட தோடு,  அமைக்கப்பட இருக்கின்ற 14 கோபுரங்களும் முற்று முழுதாக நிறுத்தப்பட வேண்டும், கனியமணல் அகழ்வு நடத்தப்பட வேண்டும், ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கின்ற 36 காற்றாலைகளினால் ஏற்பட்டிருக்கின்ற பாதிப் புகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
ஆனாலும் அதன்பின்னரும் இந்தக் காற்றா லைகளை அமைப்பதற்கான பணிகள் நிறுத்தப் படாத நிலையில் மீண்டும் பொதுமக்கள் 26.09.2025  அன்று இரவு மன்னாரில் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கு  போராடிய பொதுமக்கள், மதகுருமார்கள், உள்ளிட்டவர்கள் காடையர்களாலும், போலீசாரா லும் தாக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் பலர் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டிருந் தார்கள்.
அதன் பின்னரும் காற்றாலை அமைக்கும் பணி நடைபெறும் அது நிறுத்தப்படமாட்டாது என ஜனாதிபதியும் அறிவித்திருந்த நிலையில் மக்களது போராட்டம் தொடருகிறது இவர் களுக்கு ஆதரவாக 27.09.2025 அன்று வவுனியா நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மக்கள் போராட்ட முன்னணியினர் முன்னெடுத் திருந்தார்கள் இப் போராட்டமான வவுனியா, கிளிநொச்சி நகரங்களுக்கும் அடுத்தநாள் மன் னார் நகருக்கும் சென்று அங்கு தொடர்ந்தும் போராட்டத்தில் இணைந்திருந்தார்கள். இதிலும் பல பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள் அதேபோன்று 29.09.2025 அன்று மன்னார் நகரே முடங்கும் அளவிற்கான பாரிய போராட்டம் ஒன்றையும் மக்கள் நடத்தியிருந்தார்கள். இவ் வாறு  மன்னாரில் தொடர் போராட்டங்களை அம்மக்கள் முன்னெடுத்து வருகிறார்கள் ஆனாலும் மக்களுக்கு விரோதமான அந்தக் காற்றாலைத் திட்டத்தைக் கைவிட அரசு தயாராக இல்லை எனும் அறிவிப்போடு பணிகள் தொடருகின்றன மக்கள் போராட்டமும் தொடருகிறது.
இந்நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயருடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தி யதாகவும் அதிலே மன்னார் மறை மாவட்ட ஆயர் காற்றாலைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருப்பதாகவும் கூட செய்தி கள் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனாலும்  பொது மக்கள் அதை ஏற்கவில்லை என மறுத்து எதிர்த் துக்கொண்டு தான் இருக்கிறார் கள், ஏனென்றால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தானே. இதே வேளை மன்னார் மறை மாவட்ட ஆயர் கருத்துத் தெரிவிக்கையில் தனுடன் ஜனாதிபதி பேசியதாகவும் ஆனாலும் தான் அதற்கு அனுமதி வழங்கவில்லை எனவும் அவரும் கூறி யிருக்கின்றார். எதுவாக இருந்தாலும் இது அந்த மக்களை பாதிக்கின்ற  விடயம் என்பதால் இது நிறுத்தப்பட வேண்டும் என்பதில் பொதுமக்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றார்கள். அதன் அடிப்படையில் தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எமது நாட்டின் வளங்களை எந்த நாட்டிற்கும் விட மாட்டோம் எனக் கூறி ஆட்சியில மர்ந்தவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்.