குருந்தூர்மலை விவகாரம்: தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து “தொல்லியல் தளம்” என அறிவிப்பு

Unknown 8 குருந்தூர்மலை விவகாரம்: தமிழ் விவசாயிகளின் நிலங்களை அழித்து "தொல்லியல் தளம்" என அறிவிப்பு

கடந்த மே மாதம் தமது பூர்வீக விவசாய நிலங்களைப் பண்படுத்தி விவசாயம் செய்ய முற்பட்ட தமிழ் விவசாயிகளை அங்குள்ள கல்கமுவ சாந்தபோதி தேரர் எனும் பெளத்த பிக்கு  காவல்துறையில் பிடித்துக் கொடுத்து சிறையில் அடைந்திருந்தார்

அதன் தொடர்ச்சியாக இன்று பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்ட விவசாய நிலங்களை அழித்துத் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரமித்திருக்கின்றது.

ரணில் விக்ரமசிங்ஹ அதிகாரத்திலிருந்த போது இரவோடு இரவாக தண்ணிமுறிப்பு கிராமம் உட்பட அப்பகுதியிலுள்ள சுமார் 341 ஏக்கர் நிலத்தைத் தொல்லியல் நிலம் என எல்லைக்கற்களை நாட்டியிருந்தார்கள்.

இருப்பினும் ரணில் விக்கிரமசிங்ஹ தலையீடு செய்த காரணத்தினால் விவசாய நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை

இம் முரண்பாடுகளின் விளைவாக அப்போதைய தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் அனுர மானதுங்க தனது பதவியைக் கூட இராஜினாமா செய்திருந்தார் ஏன்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின் அமைதியாகவிருந்த கல்கமுவ சாந்தபோதி எனும் தேரரும் தொல்லியல் திணைக்களமும் அநுர அரசு அதிகாரத்திற்கு வந்த பின்னர் குருந்தூர்மலை மலை மற்றும் அதனைச் சூழவுள்ள அந்த 341 ஏக்கர் விவசாய நிலப்பரப்புக்கும் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைத்து முழுமையாக ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றார்கள்.

அதன் முதற்கட்டமாக இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட புறம்தள்ளி விவசாய நிலங்களை அழித்து அறிவித்தல் பலகைகளை இன்று தொல்லியல் திணைக்களம் வைத்திருக்கின்றது

உள்ளூரில் அரிசி உற்பத்திக்கு பயன்படுத்த வேண்டிய மிக வளமான விவசாய நிலங்களை அழித்து ஆக்கிரமிக்கும் நிலையைத் தொடரவிட்டு சம நேரத்தில் மறுபுறம் மக்களின் தேவைக்கு அரிசியை இறக்குமதி செய்கின்றார்கள்.

2028 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் 5.5 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் கடன்களை மீள செலுத்த வேண்டிய சீரழிந்த பொருளாதார சூழலுக்கு மத்தியில் இவ்வாறு இனவாதம் தொடர்ந்தால் என்ன செய்யப் போகிறது அநுர அரசு.

ஆனால் பொதுப்பரப்பில் இனவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜேவிபி ஆட்கள் வெறும் வாயில் நிறுவ முயற்சிக்கும் நிலையில் மீண்டும் மீண்டும் இனவாதம் இவ்வாறு தலைதூக்குகிறது.