வெளியுறவுக் கொள்கை தொடர்பான முரண்பாடுகளால் அரசாங்கம் பிளவு

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான முரண்பாடுகள் தற்போது அரசாங்கத்திற்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக மேற்கத்திய சார்பு நிலையில் ஒரு தரப்பும், கம்யூனிசம் அல்லது சீன சார்புக் கொள்கையில் மற்றொரு தரப்பும் ஆளும் கட்சிக்குள் செயல்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எந்தவொரு நாட்டுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாது இலங்கையின் பொருளாதார நலன்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்.

மேற்கத்திய நாடுகளுடன் இவர்கள் கூடுதலான உறவை வளர்க்க விரும்புகின்றனர். இந்த அணுகுமுறை காரணமாகவே அமெரிக்காவின் பக்கமிருந்து பெரும் ஆதரவுகள் அரசாங்கத்துக்குக் கிடைத்தன.
ஆனால் ஆளும் கட்சியின் மற்றொரு தரப்பான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

இந்தக் கடுமையான இழுபறி காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்துக்கு முக்கியமானஅம்பாந்தோட்டை சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கெரவலப்பிட்டிய மற்றும் சப்புகஸ்கந்த போன்ற பல பாரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் முடங்கியுள்ளன.

சமீபத்தில், அரசாங்கம் இந்தக் கொள்கை ரீதியான நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் சில திட்டங்களை முன்னெடுத்திருந்தது.  கடவத்தை – மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் எஞ்சிய பணிகள் மீண்டும் சீனாவுக்கு வழங்கியது.

இதற்கான கடனை அமெரிக்க டொலர்களுக்கு பதிலாக சீன யுவானில் பெறுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. மேலும் அம்பாந்தோட்டை சுத்திகரிப்பு நிலையத்திற்கான சினோபெக் (Sinopec) நிறுவனம் கேட்ட 40 வீத சந்தை வாய்ப்பை வழங்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அரசாங்கத்தின் இந்த மாற்றத்தைக் கண்காணித்த அமெரிக்கா தமது தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஊடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்க தரப்புடன் கலந்துரையாடல்களில் இதன்போது ஈடுபட்டுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த கொள்கை ரீதியான முரண்பாடு குறித்து எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளும் ஆராய்ந்து வருகின்றன.குறிப்பாக இலங்கைக்கான உலக நாடுகளின் தூதுவர்களுடன் எதிர் தரப்பின் உறுப்பினர்களும் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த சந்திப்புகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.