சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையே சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 14) பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாளிகையில் (Great Hall of the People) இடம்பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான சமூக-பொருளாதார, கடல்சார் மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பைத் தொடர்ந்து விஸ்தரிப்பது குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

முக்கியமான அபிவிருத்திப் பங்காளிப்புகளை முன்னெடுத்துச் செல்வது, பட்டுப்பாதை செயற்திட்டத்தின் (Belt and Road Initiative) கீழ் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பையும், பிராந்தியத்தில் செழிப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளையும் மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.