இலங்கை, பூட்டான், நேபாளத்தில் வசிக்கும் தனிநபர்கள் மற்றும் வங்கிகளுக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்குவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve) அனுமதி அளித்துள்ளது.
அந்நியச் செலாவணி முகாமை என்ற கடன் பெறுதல் மற்றும் வழங்குதல் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டு இந்திய ரிசர்வ் வங்கி இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய, அனைத்து இந்திய வங்கிகளுக்கும் அவற்றின் வெளிநாட்டுக் கிளைகளுக்கும் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த மாற்றம் இலங்கையில் உள்ள வர்த்தகங்களுக்கு கடன் பெறுதலை எளிதாக்கும். இந்திய ரூபாயில் கடன்களை வழங்குவதற்கான இந்த ஏற்பாடு, குறிப்பாக இலங்கையின் வர்த்தகங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அத்துடன், இது அந்நியச் செலாவணி மாற்று விகித இடர்களைக் குறைக்கும். மேலும், இது இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை கடந்த வர்த்தகம் மற்றும் நிதித் தொடர்புகளை வலுப்படுத்தவும் உதவும் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.