தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் மீறல்கள் தொடரும் நிலையிலும், சர்வதேச சமூகமானது காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளகக்கட்டமைப்புக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், சர்வதேச நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாலும், புலம்பெயர் தமிழர்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு கடும் விசனம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் கடந்த திங்கட்கிழமை இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் குறித்து வொஷிங்கடனைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்பான இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து புதிய தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் ஊடாக இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கும், இலங்கை குறித்த பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கும் வழங்கப்பட்டிருந்த ஆணை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கின்றது.
அதன்மூலம் இலங்கை அரசினால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் மற்றும் இனவழிப்பு உள்ளிட்ட மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் வழக்குத்தொடர்வதற்கு அவசியமான ஆதாரங்களை சேகரிப்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும், அவற்றை உரியவாறு பேணுவதற்குமான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இருப்பினும் இலங்கை அரசு மீண்டுமொரு முறை இத்தீர்மானத்தை நிராகரித்திருக்கின்றது.
இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறை காலநீடிப்பு செய்யப்பட்டிருப்பதை வரவேற்கும் அதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளின் இலங்கை அரசாங்கம் தொடர்பான மென்போக்கான (மிகக்கவனத்துடனான) அணுகுமுறை குறித்து தீவிர கரிசனை அடைகின்றோம்.
அத்தோடு இத்தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களினதும், தற்போது இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களினதும் பாரதூரத்தன்மையைப் பிரதிபலிப்பதற்கும், தமிழ்மக்கள் மிகமோசமான இழப்புக்களுக்கு முகங்கொடுத்தமையை அங்கீகரிப்பதற்கும் தவறிவிட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு முரணான பாரிய குற்றங்கள் தொடர்பில் இதுவரை எவரும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை.
மாறாக மிகையான இராணுவமயமாக்கம், தொடர் காணி சுவீகரிப்பு, வட- கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணித்தல், அரச கட்டமைப்புக்குள் சிங்கள பௌத்த பேரினவாதத்தை உட்புகுத்தல் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட மீறல்கள் அரசாங்கத்தினால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதுமாத்திரமன்றி பாதுகாப்புப்படையினரால் தமிழர்களுக்கு எதிராக அத்துமீறல்கள், ஒடுக்குமுறைகள் மற்றும் வன்முறைகள் என்பன கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
இவற்றுக்கு மத்தியில் சர்வதேச சமூகமானது நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்குத் தீர்வை வழங்காமல், பொறுப்புக்கூறலில் இருந்து குற்றவாளிகளைப் பாதுகாக்கும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளகக்கட்டமைப்புக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றது.
சர்வதேச நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாலும், புலம்பெயர் தமிழர்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் நீதி,பொறுப்புக்கூறல் மற்றும் தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு என்பன இன்றி நியாயமான நல்லிணக்கம் சாத்தியமில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.