பாடசாலை மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வகுப்பறையில் உள்ள 6 மாணவர்களில் ஒருவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில் இலங்கையில் நாளாந்தம் இளைஞர்களிடையே மன ரீதியான தாக்கம் அதிகரித்து செல்வதாக களனி பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் மியுரு சந்திரதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக மனநல ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு நேற்று புதன்கிழமை (08) இலங்கை மன்றத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
உலகளாவிய தரவுகளுக்கமைய 8 பேரில் ஒருவர் மனநல சிக்கலுடன் வாழ்ந்துவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் விதத்தையும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடும். களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடமும் , மனநல பிரிவும் இணைந்து முன்னெடுத்திருந்த ஆய்வில் பாடசாலை மாணவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
10 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் 1,045 பாடசாலை மாணவர்களை மையமாகக் கொண்டு மேற்படி விசேட ஆய்வினை முன்னெடுத்திருந்தோம்.
இதன்போது அவர்களில் 24 சதவீதமானோர் விபத்துகள் உள்ளிட்ட அபாயகரமான நிலைமைகளால் ஏற்பட்டிருந்த மனநல சிக்கலால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். உலக நாடுகளில் இளைய சமுதாயத்தினரிடையே அபாயகரமான நிலைமைகளால் ஏற்படக்கூடிய மனநல பாதிப்பு 10 தொடக்கம் 13 சதவீதமாக காணப்படுகின்ற போதிலும் இலங்கையில் 24 சதவீதமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை அவதானம் மிக்க விடயமாக உள்ளது.
மேலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சுமார் 60 சதவீதமானோர் அபாயகரமான நிலைமைகள் அன்றி வேறு காரணிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வகுப்பறையில் உள்ள 6 மாணவர்களில் ஒருவர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் இலங்கையில் நாளாந்தம் இளைஞர்களிடையே மன ரீதியான தாக்கம் அதிகரித்து செல்வதைக் காணமுடிகின்றது. பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கிடையிலான தொடர்பாடல் இன்மை, வன்முறைகளுக்கு ஆளாகும் சிறார்களின் மனநிலையை சீரமைக்காமை போன்ற காரணங்கள் இத்தகையதொரு நிலை உருவாகியுள்ளது. இக்காலத்தில் உள்ள சிறுவர்களிடம் எதிர்வினைகளை தாங்கக் கூடிய பக்குவம் மற்றும் அதனோடு இணைந்து செயற்படகூடிய ஆற்றலும் குறைவாக உள்ளமையால் மன உளைச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 25 வருட காலப்பகுதியில் மன நலம் தொடர்பாக நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த 33 ஆய்வுகளைக் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், வயது வந்தவர்களில் 30 வீதமானோர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன், 39 வீதமானோர் கடுமையான மன நோக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது என்றார்.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவிக்கையில்,
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10 ஆம் திகதி உலக மனநல ஆரோக்கிய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் இவ்வருடம் “அபாயகரமான மற்றும் அவசர நிலைமைகளின் போது அனைவருக்கும் மனநல சேவை” என்ற விசேட கருப்பொருளுக்கமைய கொண்டாடப்பட உள்ளது. நாட்டில் உள்ள சுமார் 10 சதவீதமானோர் வெவ்வேறு விதமான மன நல நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.
20 சதவீதமானோர் கடுமையான மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மனநல சேவைகளுக்கு உரிய அங்கீகாரமும் முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும். 2024 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் 37 ஆயிரம் பேர் மன நல பிரிவில் சிகிச்சைப் பெற்றுள்ளனர். தற்கொலைக்கும் மன உளைச்சலே பிரதானக் காரணமாக உள்ளது என்றார்.