சுதுமலை அம்மன் ஆலயத்தின் பழைய ஆதாரங்கள் இல்லாமற்போகும் அபாயம்!

சுதுமலை அம்மன் ஆலயத்தின் பழைமையான கட்டடம் இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய ஆதாரங்கள் இல்லாமற்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீரணி நாகபூஷணி கோவிலிலிருந்து பேரணியாகச் சென்ற மக்கள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் பிரதேச செயலக பதவிநிலை அதிகாரி ஒருவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர் .

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில்,

பழைமையான கட்டடம் ஆலயப் புனரமைப்புக்காக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய ஆதாரங்கள் இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. புனர்நிர்மாணத்தை நாங்கள் தடுக்கவில்லை தேவையான விடயத்தை புனர்நிர்மாணம் செய்துவிட்டு ஆலயத்தின் பழைமையைப் பேணிப்பாதுகாக்க வேண்டும்.

கட்டட நிர்மாணத்துக்காக ஊர் மக்களிடம் நிதி சேகரிக்கின்றனர். ஆனால் ஊர்மக்களிடம் அபிப்பிராயம் கேட்பதில்லை. நிர்வாகத்துக்குள் உள்ளவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டும் பட்சத்தில் அவர்கள் நிர்வாகத்தில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

பழைய கட்டடத்தை இடிக்கக்கூடாது என நாங்கள் ஏற்கனவே பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்திருந்தோம். பிரதேச செய்லகத்தின் துணையுடனேயே இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டது. எனவே இனி இடம்பெறுகின்ற நிர்மாணப் பணிகள் அரச திணைக்களம் ஒன்றின் கண்காணிப்பின் கீழேயே இடம்பெறவேண்டும் – என்றனர்.