இலங்கையின் பசுமை வலுசக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படும் என ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)தெரிவித்தார்.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)மற்றும் அதன் சிரேஷ்ட முகாமைத்துவம் நேற்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடனுதவியின் கீழ் இதுவரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்குவதாக தலைவர் இங்கு தெரிவித்தார்.
அதன்படி, இலங்கையில் வலுசக்தி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதுடன், பசுமை வலுசக்தி, பசுமை போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி எதிர்காலத்தில் ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
வட்டி விகிதங்களைக் குறைத்தல் மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பொருளாதார ரீதியாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை விளக்கிய ஜனாதிபதி, தேசிய பொருளாதாரத்தின் நன்மைகளை நாட்டின் சாதாரண மக்களுக்குக் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும் தெரவித்தார்.
அதன்போது, அரச துறையை மறுசீரமைத்து செயற்திறன் மற்றும் வினைத்திறனான அரச சேவையை உருவாக்கும் திட்டங்களை விளக்கிய ஜனாதிபதி, வினைத்திறனான அரச சேவையை வழங்குவதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.