இலங்கையின் அண்மையகால பொருளாதாரச் செயல்பாடுகள் வலுவாக இருந்தாலும், பொருளாதார மீட்சி இதுவரை முழுமையடையவில்லை என்றும், நீண்டகால வளர்ச்சிக்கு அவசரமாக கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் திறமையான பொதுச் செலவினங்கள் தேவை என்றும் உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி நெருக்கடிக்கு முன்னைய நிலைகளை விட தற்போதைய நிலைமை குறைவாகவே உள்ளது என்றும்,வறுமை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் 2025 இல் இலங்கையின் பொருளாதாரம் 4.6% ஆக வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும், இது 2026 இல் 3.5% ஆகக் குறையக்கூடும். பொருளாதார நிலை வளர்ச்சி வலுவாகவும், பணவீக்கம் குறைவாகவும், வெளிநாட்டு வரவுகள் அதிகமாகவும் இருந்தாலும், பொருளாதார உற்பத்தி இன்னும் 2018 ஆம் ஆண்டின் நிலைகளை விடக் குறைவாகவே உள்ளது.
வறுமை குறைந்து வந்தாலும், இது 2019 ஆம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், 10% மக்கள் வறுமைக் கோட்டிற்கு சற்று மேலே வாழ்கின்றனர். ஊட்டச்சத்துக் குறைபாடு ஒரு தீவிரமான பிரச்சினையாகவே நீடிக்கிறது. தொழிலாளர் சந்தை மெதுவாகவே மீண்டு வருகிறது, பல குடும்பங்கள் நெருக்கடியின் போது இழந்த வாழ்வாதாரங்களை இன்னும் மீட்கவில்லை என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
“இலங்கையின் அண்மைய பொருளாதார முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக இருந்தாலும், மீட்சி சீரற்றதாகவும் முழுமையற்றதாகவும் உள்ளது. வலுவான, நியாயமான பொருளாதாரத்தை உருவாக்க, தனியார் துறை முதலீடு செய்து வேலைகளை உருவாக்க வேண்டும், மேலும் மக்களின் பொதுப் பணத்தின் ஒவ்வொரு ரூபாவும் சரியாகச் செலவிடப்படுவதை இலங்கை உறுதி செய்ய வேண்டும்” என்று உலக வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை பிரிவுக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லென் குறிப்பிட்டார்.
நீண்டகால வளர்ச்சிக்கான சீர்திருத்தங்களின் அடிப்படையிலும், வளர்ச்சியை நிலைநிறுத்தவும், வறுமையைக் குறைக்கவும், உலக வங்கி சில முக்கியப் பரிந்துரைகளை வலியுறுத்தியுள்ளது,
தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிக்கும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான தடைகளை தளர்த்துதல், வணிகச் சூழலை மேம்படுத்துதல், வரி நிர்வாகத்தை நவீனமயமாக்குதல், மற்றும் நிலம், தொழிலாளர் சந்தைகள் தொடர்பான விதிமுறைகளை மேம்படுத்துதல் ஆகிய பரிந்துரைகளை உலக வங்கி முன்வைத்துள்ளது.
அரசாங்கத்தின் செலவில் 80% க்கும் மேல் பொதுத்துறைச் சம்பளம், நலத் திட்டங்கள் மற்றும் வட்டி செலுத்தலுக்காகவே செலவிடப்படுவதால், உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வளர்ச்சியை மேம்படுத்தும் முதலீடுகளுக்குப் போதிய இடமில்லை. எனவே, இருக்கும் பொதுச் செலவினங்களின் மூலம் அதிகபட்ச பலன்களைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் பொது ஊதியச் செலவைக் கட்டுப்படுத்த, நியாயமான ஊதியக் கட்டமைப்புகள் மற்றும் நவீன ஊதிய முறைகளை அறிமுகப்படுத்துதல், முக்கிய உள்கட்டமைப்பு இடைவெளிகளில் கவனம் செலுத்துதல், வலுவான திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டு செயல்முறைகளைச் செயல்படுத்துதல், கிட்டத்தட்ட முடிந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல், மற்றும் உள்கட்டமைப்புப் பராமரிப்புக்கான நிதியை அதிகரிக்குமாறும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
உலக வங்கியின் இந்த அநிக்கை தெற்காசிய மேம்பாட்டுத் தகவல் (South Asia Development Update) அறிக்கையின் ஒரு துணை அலகாக காணப்படுகின்றது. இது தெற்காசியப் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி 6.6% ஆக இருக்கும் என்று கணிக்கிறது, ஆனால் எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மந்தநிலை ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறது.
இந்நிலையில், இலங்கைக்கான உலக வங்கியின் முதன்மையான வெளியீடுகளில் ஒன்றான ‘இலங்கை அபிவிருத்தித் தகவல் (Sri Lanka Development Update)’ அறிக்கை, கொழும்பில் செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 7, 2025) வெளியிடப்பட்டது.
உலக வங்கியின் வெளி விவகார அதிகாரி புத்தி ஃபெலிக்ஸ் கிங் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான குழும முகாமையாளர் கெவோர்க் சர்க்சியன் (Gevorg Sargsyan), இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான உலக வங்கியின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் (Richard Walker), இலங்கைக்கான உலக வங்கியின் உள்நாட்டுப் பொருளாதார நிபுணர் சுருதி லக் தர்ஷன் (Shruti Luck Tharshan) உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.
இதன்போது காணொளி வாயிலாக உரைாயற்றிய உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான குழும முகாமையாளர் கெவோர்க் சர்க்சியன் (Gevorg Sargsyan), இலங்கையின் பொருளாதார மீட்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டினார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை மக்களின் கடின உழைப்பு மற்றும் மீள்திறன் காரணமாக, 2025 இன் முதல் பாதியில் நாட்டின் பொருளாதாரம் 5 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. தொழில்துறை, சேவைத் துறைகள், பணவீக்கம் குறைதல், கடன் அணுகல் மேம்பாடு, அரசாங்க நிதி மற்றும் வெளிநாட்டு கையிருப்பு ஆகியவற்றில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பொருளாதாரம் இன்னும் நெருக்கடிக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை. வறுமை விகிதங்கள் உயர்வாகவே நீடிப்பதுடன், ஊட்டச்சத்துக் குறைபாடு ஒரு தீவிரமான கவலையாக உள்ளது.
வலுவான மற்றும் அவசரமான சீர்திருத்தங்களைச் செயல்படுத்தத் தவறினால், 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி 3 வீதம் என்ற மிதமான அளவில் இருக்கும்.
நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், வறுமையைக் குறைப்பதற்கும், அரசாங்கம் நிலையான மற்றும் ஒத்திசைவான கொள்கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது அவசியம், வர்த்தகத் தடைகளை அகற்றி, முதலீட்டுச் சூழலை மேம்படுத்த வேண்டும். வரி முறையை நவீனமயமாக்குவது மற்றும் வணிகங்களை வளர்ந்து வேலைகளை உருவாக்குவதை எளிதாக்குவது போன்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுத்துறையில் நிதிப் பற்றாக்குறை (Fiscal Space) உள்ளதால், தனியார் துறை தலைமையிலான வளர்ச்சிக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அரசாங்கத்தின் மொத்தச் செலவில் சுமார் 80% பொதுத்துறைச் சம்பளம், நலத்திட்டங்கள் மற்றும் வட்டி செலுத்தல்களுக்கு பயன்படுகின்றது. உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வளர்ச்சியை ஊக்குவிக்கும் முதலீடுகளுக்கு இடமளிக்க, தற்போதுள்ள பொதுச் செலவினங்களின் திறன் மற்றும் தாக்கத்தை மேம்படுத்துவதற்கு கணிசமான வாய்ப்பு உள்ளது என்று மேலும் தெரிவித்தார்.