இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையை நீடிப்பதற்கான, திருத்தப்பட்ட வரைவில், இணை அனுசரணை வழங்க, 22 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரைவுத் தீர்மானத்தின் முக்கிய ஆதரவாளர்களாக, பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மெசிடோனியா ஆகியன செயற்படுகின்றன.
இந்தநிலையில் 22 நாடுகள், முக்கியமாக ஐரோப்பிய நாடுகள், அக்டோபர் முதலாம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு இணை அனுசரணையாளர்களாக கையொப்பமிட்டுள்ளன.
இலங்கை மீதான தீர்மானத்தை ஆதரிக்கும் 27 நாடுகளில் பத்து நாடுகள் தற்போதைய சுழற்சிக்கான, ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்களாக உள்ளன. இதேவேளை, ஆணை நீடிப்பு இலங்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, மனித உரிமை பேரவையின் மேற்பார்வையின் கீழ் வைத்திருக்கும்.
அதேநேரம், இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்தின் காலமும் இந்தத் தீர்மானத்தின் மூலம் நீடிக்கப்படும்.
புதிய தீர்மானம், அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளையும், நாட்டில் பல தசாப்தங்களாக பிளவுபடுத்தும் இனவெறி அரசியல் மற்றும் இன மோதல்களின் விளைவாக ஏற்பட்ட தீங்குகள் மற்றும் துன்பங்களை ஒப்புக்கொள்வதையும் வரவேற்கிறது.
எனினும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டியதன் அவசரத் தேவையை வரைவு எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச உதவியை நாடவும் இது அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
அதேநேரத்தில் இது முற்றிலும் சுயாதீனமாகவும், பயனுள்ளதாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இதேவேளை, இலங்கை தொடர்பில் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளால் “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” எனும் தலைப்பிலான புதிய பிரேரணையின் இறுதி வரைவில் “இனமோதல்” என்ற சொற்பதம் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்பிரேரணை இன்றைய தினம் (6) ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதுடன், வாக்கெடுப்பின்றி அது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.