மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் இலங்கை தமிழரசு கட்சி முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணைகளை ஏற்றுக்கொண்டால் விரைவில் தேர்தலை நடத்தமுடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாகாண சபை தேர்தல் தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எப்போதும் தயாராகவே இருக்கிறது.
எனினும், பாராளுமன்றம் அதற்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறை என்பது, உள்ளூராட்சி மன்ற தேர்தலை போன்ற தொகுதி மற்றும் விகிதாசாரத்தை கொண்ட கலப்பு தேர்தல் முறையாக இருக்கும். எனினும், அந்த தேர்தல் முறைமைக்கு எல்லை நிர்ணயம் செய்வதே தடையாக இருக்கிறது.
புதிய தேர்தல் முறைக்கான எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட போதிலும், அது நல்லாட்சி அரசாங்கத்தின் போது நிராகரிக்கப்பட்டுள்ளது. பின்னர் அது மீளாய்வு செய்யப்பட்ட போதும், அது மீண்டும் நிராகரிக்கப்பட்டமையால் புதிய தேர்தல் முறைமை இதுவரை சாத்தியமற்ற ஒன்றாக இருக்கிறது. எனவே, அரசாங்கம் புதிய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த முற்பட்டால் அதற்கு நீண்ட காலம் செல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறு இல்லாது, தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமாயின் பழைய எல்லை நிர்ணயத்தை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில், பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் விகிதாசார தேர்தல் முறையின் கீழ், மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி தெரிவித்தார்.
இதற்காக இலங்கை தமிழரசு கட்சியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணைகளை, ஏற்றுக்கொண்டால், மாகாணசபை தேர்தலை நாளைய தினமே நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.