இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரான மீட்சி வலுவானது: IMF

இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து சுவாரஸ்யமான முன்னேற்றத்தை அடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

விரிவாக்கப்பட்ட நிதி வசதியானது, சர்வதேச நாணய நிதியத்தின்,கீழ் நாடு மீட்சிக்கான வலுவான நிலையை அடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் 2ஆம் திகதி வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசாக், இலங்கையின் பணவீக்கம் குறைவாகவே உள்ளதாகவும், அரசாங்கத்தின் வருவாய் முன்னேற்றம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சர்வதேச இருப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னரான மீட்சி குறிப்பிடத்தக்கதாக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பட்ஜெட்டில் வருவாய் – மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2022 இல் 8.2 சதவீதத்திலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.5 சதவீதமாக மேம்பட்டுள்ளது, இதுவும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு, இருப்பினும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை “கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 1ஆம் திகதி, இலங்கையின் EFF ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை, சர்வதேச நாணய நிதியம் நிறைவு செய்துள்ளது.

இதன் மூலம் US$350 மில்லியன் ஆதரவை வெளியிட்டு மொத்த நிதியுதவியை US$1.74 பில்லியனாகக் கொண்டு வந்துள்ளது.

EFF இன் ஐந்தாவது மதிப்பாய்வை நடத்த, சர்வதேச நாணய நிதியத்தின் பணி தற்போது இலங்கையில் உள்ளது என்பதை கோசாக் உறுதிப்படுத்தியுள்ளார்.