புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பின்னர், மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமானால், எல்லை நிர்ணயப்பணிகளை விரைவில் ஆரம்பிப்பது வரவேற்கத்தக்கது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு சுமார் ஒரு வருட காலம் தேவைப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2015 முதல் 2020ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தத்தின் விளைவாக சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், மாகாணசபைத் தேர்தல் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், தற்போதுள்ள சட்ட அமைப்பின் கீழ், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள எல்லை நிர்ணய அறிக்கைக்கு அமைய, தேர்தலை நடத்த முடியுமா? என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
இல்லையெனில், புதிய எல்லை நிர்ணயம் தேவைப்படும், அல்லது முன்னைய முறையின்படி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.