இலங்கை இந்தியாவுடன் புதிய வர்த்தக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வலியுறுத்தல்!

இறக்குமதிகளுக்கான வரிகளை அமெரிக்கா அதிகரித்துள்ள நிலையில், இந்திய -இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான எட்கா தொடர்பில் இலங்கை இந்தியாவுடன் புதிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தடைகளை தீர்க்க ஒரு தலைமை பேச்சுவார்த்தையாளரை நியமிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா இலங்கையின் முக்கிய ஏற்றுமதிகளுக்கு 20 சதவீத வரியை விதிப்பதால், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதைக் கருத்திற் கொண்டு, 25 ஆண்டுகளுக்கு முன்னர் கையெழுத்திடப்பட்ட இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் அதன் ஏற்றுமதி ஒதுக்கீட்டை விரிவுபடுத்துமாறு இந்தியாவை இலங்கை கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் எதிர்பார்க்கக்கூடிய சிக்கல்களைத் தீர்க்க தற்போதுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்குமாறு கொழும்புக்கு, புதுடெல்லி தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை இலங்கை விழித்தெழுந்து, இந்த உடன்படிக்கை நன்மை பயக்கும் என்பதை உணரும் வரை இந்தியா காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கூறியுள்ளார்.