தமிழரைதமிழரே ஆளக்கூடிய வகையிலான வாக்கெடுப்பை நடத்துமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை

‘அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பில் தமிழ், மக்களாகிய எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க எம்மை நாமே ஆளக்கூடிய பொது வாக்கெடுப்பை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி நிற்கின்றோம்’ என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளருக்கு, வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ‘தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு சர்வதேச நீதி வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையை முற்றாக நிராகரிப்பதாகவும் செம்மணி மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள நூற்றுக்கணக்கான மனிதப் புதைகுழிகள் விவகாரத்திற்கு காலம் தாழ்த்தாது விரைவான சர்வதேச சிறப்பு சுயாதீன விசாரணை ஆணைக்குழுவை நியமித்திட வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.

தாயகத்தில் அதிகளவான சிறுவர், குழந்தைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் 350 இற்கும் மேற்பட்டவர்கள் சர்வதேச நீதி கோரி போராடி நீதி கிடைக்காமலேயே மன உளைச்சலில் இறந்துள்ளனர்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வொல்கர் ரெக் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து இலங்கை அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

‘இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அத்துடன் அனைத்து வகையான உள்நாட்டு பொறிமுறை மற்றும் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஆகியவற்றை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்’ என்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

‘சர்வதேச நீதிப்பொறிமுறைகளில் மட்டுமே நாம் நம்பிக்கை வைக்கின்றோம். சுயாதீனமான, பக்கச்சார்பற்ற, சர்வதேசப் பொறிமுறையை நாம் கோருகின்றோம். தற்போதைய அலுவலக கருத்திட்டம் தரமுயர்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என்றும் அவர்களின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்டு வரும் இன அழிப்பு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள பன்னாட்டு நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்பட வேண்டும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு முற்பட்ட காலங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முடியாதவிடத்து இலங்கை தொடர்பான சிறப்புச் சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை ஏற்படுத்தி இனவழிப்பு உள்ளிட்ட குற்றவியல் பொறுப்புக்கூறலுக்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மனிதப் புதைகுழிகள் பற்றிய கண்துடைப்பு விசாரணைகளை ஸ்ரீலங்கா அரசு நிறுத்தி அது சர்வதேசத்தின் கண்காணிப்பில் நடைபெறவேண்டும் என கோருகின்றோம் என்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடராது நிறுத்த சில உடனடி நடவடிக்கைகளையும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.  இதன்படி, அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர்கள் தமது சுயாதீனமான ஊடகப்பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். சிங்கள குடியேற்றம், பௌத்தமயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.

தமிழர் தாயகப் பரப்பில் ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், நீதி வேண்டி போராடுபவர்கள் மீது புலனாய்வு பிரிவின் அச்சுறுத்தல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

எமது தேசத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும். எமது வளங்கள் சுரண்டப்படுவதை உடன் நிறுத்த வேண்டும். பயங்கரவாத தடுப்பு சட்டம், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

இலங்கையில் நிலையான அமைதி ஏற்படுவதற்கு ஈழத்தமிழருக்கான தனித்துவமான இறையாண்மைக்குரிய தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அனைத்துலக சமூகத்தின் மத்தியஸ்தத்துடன் நிறைந்த அரசியல் தீர்வு குறிப்பிட்ட கால நிர்ணயத்திற்குள் காணப்படவேண்டும். இயலாதவிடத்து விரைவாக அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பில் தமிழ், மக்களாகிய எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க எம்மை நாமே ஆளக்கூடிய பொது வாக்கெடுப்பை நடைமுறைப்படுத்துமாறு சர்வதேச சமூகத்தை கோரி நிற்கின்றோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.