மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காகப் போராடும் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது. மீண்டும் தமிழ்மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு எனத் தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் காற்றாலை மின்உற்பத்தித் திட்டத்துக்கு எதிரான அந்த மாவட்ட மக்களது உண்மையான- நீதியான -போராட்டத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது சட்டவிரோதமானது. அதில் ஈடுபட்ட மக்களை சட்ட ரீதியாகக் கைது செய்திருக்கவேண்டும். ஆனால் அவர்களைத் தாக்குவதற்கும் காயங்களை ஏற்படுத்துவதற்கும் அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அரசுக்கு எதிராக ஜனநாயகரீதியான போராட்டங்கள் பெருமளவில் பரந்து விரிவடையும் போது அரசு அவை தொடர்பிலே எந்தகைய அணுகுமுறையைக் கையாளும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இதனை நாங்கள் கருதுகிறோம்.
அத்துடன் இந்த அடாவடியை அங்கீகரிக்கவோ அல்லது ஆமோதிக்கவோ ஜனநாயகத்தை மக்களது அடிப்படை உரிமைகளை மதிக்கின்ற எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இந்தப் பிரச்சினையை நிதானமாகக் கையாள இந்த அரசு முனைந்திருக்க வேண்டும். அரசாங்கம் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதிகளை அழைத்துப்பேசி தன்னுடைய நிலைப்பாட்டில் கூட அவர்களுக்கு எடுத்துரைத்து ஒரு நிதானமாக தீர்வுக்கு வரமுடியும் – என்றார்