2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெண் கைதிகளுடன் 47 குழந்தைகள் சிறைச்சாலையில் உள்ளதாக சிறைச்சாலைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
20 ஆண் குழந்தைகளும் 27 பெண் குழந்தைகளுமே இவ்வாறு பெண் கைதிகளுடன் சிறைச்சாலையில் உள்ளனர். 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1483 பெண்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 229 பெண்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்றுன்னர்.
2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 184 பெண்கள் போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 75 பெண்கள் ஐஸ் போதைப்பொருள் தொடர்பிலும், 97 பெண்கள் ஹெரோய்ன் போதைப்பொருள் தொடர்பிலும், 8 பெண்கள் கஞ்சா போதைப்பொருள் தொடர்பிலும் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.