“எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”: முத்து நகரில் தொடரும் போராட்டம்!

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தருமாறு கோரி 14ஆவது நாளாகவும் இன்று (30) திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சத்யாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“பொய் வேண்டாம்”, “எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும்”, “விவசாயிகளை இப்படியா நடத்துவது”, “விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு” மற்றும் “அரசே எங்களுக்கு சோறு போடும் நிலத்தை மீட்டுத் தா” போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில்,

352 விவசாயிகளின் காணிகளை சூரையாடியுள்ளனர். அவற்றைப் பெற தொடர்ச்சியாக 14 நாட்களை தாண்டியும் போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இது தொடர்பில் எங்களுக்காக அரச தரப்பில் இருந்தோ அரசியல்வாதிகளோ குரல் கொடுக்க முன்வரவில்லை. பிரதமர் பத்து நாட்களுக்குள் முடிவு தருவதாக கூறியுள்ளார். அந்த நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம் என்றார்கள்.