ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் அங்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க திங்கட்கிழமை (29) ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி இஷிகுரோ நொரிஹிகோவின் (ISHIGURO Norihiko) பங்கேற்புடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜப்பான் இலங்கை வர்த்தக ஒத்துழைப்புக் குழுவின் (JSLBCC) தலைவர் மற்றும் ITOCHU இன் தலைவர் புமிஹிகோ கொபயாஷி (Fumihiko Kabayashi) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டில் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்கி மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
இலங்கையின் முக்கிய பொருளாதார பங்காளியாக இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தையும், அதன் ஊடாகப் பெறக்கூடிய பரஸ்பர நன்மைகள் குறித்தும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.