மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் முன்னெடுப்பு

DSC 0478 மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் முன்னெடுப்பு

மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கு எதிராகவும், மக்கள் மீது காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம்  திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக, மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மன்னார் மாவட்டம் முழுவதும் இன்றைய தினம் பொது முடக்கத்திற்கு  அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து இந்த அழைப்பினை விடுத்திருந்தன.

அதற்கமைய, இன்றைய தினம் காலை முதல் மன்னார் பஜார் பகுதி உள்ளடங்கலாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பல்வேறு கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை. இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடியிருந்தனர்.

DSC 0484 மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் முன்னெடுப்பு

மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி காற்றாலை கோபுரங்களை அமைத்தல், மன்னாரில் கனிம மணல் அகழ்வு மற்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காவல்துறையினரால் அருட்தந்தையர்கள் உட்பட பொதுமக்கள் தாக்கப்பட்டமை ஆகிய சம்பவங்களை கண்டித்து இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் இருந்து போராட்டக்குழு ஒன்று மன்னாருக்குச் சென்றிருந்தது.

மேலும் வடக்கில் உள்ள சில மாவட்டங்களில் இருந்தும் ஆதரவு தெரிவித்து, சமூக செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

DSC 0524 மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் முன்னெடுப்பு

மேலும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்றுகூடிய மக்கள் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது போராட்டக்குழு சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டிய கடிதமொன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.