ஐக்கியநாடுகள் சபையின் 80வது ஆண்டுத் தொடக்க அமர்வு அது மக்கள் இறைமைக்கு முக்கியத்துவம் கொடுக்காது அரச இறைமைக்கு முக்கியத்துவம் கொடுத்த வரலாற்றால் அதனது செயலை இழந்த கட்டமைப்பாக மாறிவிட்டதை உலகுக்குத் தெளிவுபடுத்தக் கூடிய வகையில் அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப்் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ஆகியோரின் உரைகள் அங்கு அமைந்தன. டொனால்ட் ட்ரம்பின் சுதந்திரமான திறந்த எல்லைகளுக்கான அச்சுறுத்தல், இஸ்லாமிய சரியாச் சட்டம் மேற்குலகின் சட்டமாக மாறுகிறது என்ற பயமுறுத்தல், ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிட்டது, உலகின் காலநிலை சீர்கேடு குறித்த எச்சரிப்பு வெறும் புரளி போன்ற கருத்துக்கள் அடங்கிய 58 நிமிட ஐக்கிய நாடுகள் சபை உரை, ஆங்கில ஊடக உலகின் புகழ்பெற்ற ராஜதந்திர ஆய்வாளர் பற்றிக் வின்ரூர் அவர்களை ‘இனிமேல் உலகம் அமெரிக்காவை வலிமையான தலைமையாகப் பார்க்காது என்பது தெளிவாகியுள்ளது-ஐக்கிய நாடுகள் சபையின் விழுமியங்களைப் பிய்த்து எறிந்த அந்த உரை ட்ரம்பின் திட்டங்களுக்கு எதிரான பலமான அணியொன்றின் தேவையை உணர்த்தியுள்ளது” (Trump’s UN speech makes it clear: the world can no longer look to the US for strong leadership – US president’s speech made a mockery of UN values and highlights the need for strong anti-Trumpian alliances) என எழுதவைத்துள்ளது. அதுமட்டுமல்ல பற்றிக் வின்ரூர் பிரேசிலின் அரசத்தலைவர் லூயிஸ் இன்னாசியோ லூலா டா சில்வா அமெரிக்க அரசத்தலைவரின் உரை நாடுகளின் இறைமை மேலான தாக்குதல்களையும், காரணமற்ற தடைகளையும், ஒருதலைப்பட்சமான தலையீடுகளையும் உலகச் சட்டாக்கியுள்ளது எனக் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கிய சென்பிரான்சிஸ்கோ நாட்டினரின் முக்கிய நோக்குகளையே அழித்து விட்டது எனவும் கூறி பணத்தை வழிபடும் அறியாமையை வளர்க்கும் உடல்நிலையிலும் டிஜிட்டல் நிலையிலும் இராணுவமயப்படுத்தலை நடைமுறைப்படுத்தி ஊடகசுதந்திரத்தை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை உரை ஊக்குவிக்கிறது எனக் குறிப்பிட்டமையையும் மீள் நினைவுபடுத்தியுள்ளார்.
தென்கொரிய அரசத்தலைவர் லீ ஜே மையுங் (Lee Jae Myung) காலநிலைச் சீர்கேடு வெறும் புரளியல்ல உலகில் மனிதாயத்துக்கான பேராபத்து. இந்நிலையில் உலகம் அமெரிக்காவின் உதவியின்றி இதனை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளதையும் பற்றிக் வின்ரூர் மீள்பதிவிட்டுள்ளார். ரொனி பிளேயரின் தலைமையில் அமைக்கப்பட உள்ள நாடுகடந்த பலஸ்தீனிய ஆட்சி மூலம் காசாவை பலஸ்தீனியர்களுக்கு உரியதாகக் கட்டியெழுப்ப இஸ்ரேயல் அனுமதிக்காது என்பதை நத்தன்யாகூவின் ஐ. நா. உரை மிகத் தெளிவாக்கியுள்ளது. எனவே பலஸ்தீனியப் பிரச்சினை தொடர்கதையாகவே தொடரும் என்பதே நடைமுறையாகவுள்ளது. இதே நிலைதான் ஈழத்தமிழருக்கும் 2009 முதல் தொடர்கிறது என்பதும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்.
அதே வேளை சீன ரஸ்ய வடகொரிய கூட்டில் சீனா நடத்திக்காட்டிய நவீன படையணி வகுப்பும், சீனாவின் முதலாவது மின்காந்த உந்து கணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் சி என் எஸ் புஜியானின் அதிசக்தி வாய்ந்த போர்விமானங்களான ஜே-15 டி, ஜே -35 மற்றும் கே. ஜே 600 ஆகியவற்றை உந்தித்தள்ளி வெள்ளோட்டமானதும், இந்திய மிக் 21 போர் விமானங்களுக்குப் பிரியாவிடை கொடுத்து புதிய சக்தி படைத்த விமானங்களையும் டாங்கிகளையும் பயிற்சித்துப் பார்த்தமையும், ஆசியாவினதும் குளோபல் சவுத்தினதும் பலத்தின் உலக பிரகடனமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் 2009க்குப் பின் 700 போர்க்கப்ல்களை இலங்கைத்துறைமுகத்தில் பயிற்சிக்குவரவைத்த சிறிலங்கா நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு பில்லியன் ரூபாக்களைச் செலவு செய்து தனது கடற்படையை நவீனப்படுத்திக் கொண்டு 33 நாடுகளை இணைத்து “மாறிவரும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் கண்ணோட்டம்” என்ற மையப்பொருளில் 12வது ஆண்டாக காலி கடற்படைகளுக்கான கலந்துரையாடலை நடாத்தியதும் முக்கியமான விடயம்.
இதில் சிறிலங்காவின் பிரதமர் “இந்துமாக் கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கையின் அமைவிடம் அதிசயமானது. அதனை நாம் ஆக்கிரமித்துள்ளோம். இந்துமாக்கடல் உலகின் மிக நீடிக்கப்பட்ட மூலோபாய கடல்சார் களங்களில் ஒன்றாகும். இது வர்த்தகம் மற்றும் எரிசக்தி பாதுகாப்புக்கான உயிர்நாடியாக உள்ளது. இதனை நாம் இந்து மாக்கடல் அமைதியாகவும், பாதுகாப்பானதாகவும் நிலையானதாகவும் நியாயம் மற்றும் ஓத்துழைப்பு மூலம் ஆளப்படவும் அனைத்துப் பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலங்கையின் அர்ப்பணிப்பாகும்” எனக் கூறியுள்ளார்.
இந்த இலங்கையைச் சுற்றியுள்ள இந்துமாக்கடலின் ஐந்தில் மூன்று பகுதிக்கு உரிமையாளரான ஈழத்தமிழர்கள் இந்த வலிமைகள் குறித்து வாய்திறந்ததே இல்லை. 1991இல் தமிழீழ உட்கட்டுமானங்கள் குறித்த யாழ்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழீழ மேம்பாட்டுப் பேரவையின் நூல் மட்டுமே இவை குறித்துப் பேசின. ஆனால் அதனையாவது முன்னிறுத்தி இதுவரை ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அனைத்துலகச் செயற்பாட்டாளர்கள் அனைத்துலகத்துடன் எந்த வித பொருளாதார வர்த்தக திட்டமிடலையும் மேற்கொண்டதில்லை. ஆனால் சிறிலங்கா ஈழத்தமிழரின் கடலை வானை நிலத்தை தான் ஆக்கிரமித்த நிலையில் அதனைத் தனதாக உலகிற்கு அறிவித்துத் தனது உலகப் பாதுகாப்பை உலக பொருளாதார உதவிகளை பெற்று வளர்கிறது என்பதே நடைமுறையாகவுள்ளது. இதற்குக் காரணம் ஈழத்தமிழர்கள் தங்கள் தயாகத்தின் நிலத்தைக் கடலை வானை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் இன்று வரை தாங்கள் வாழ்வாதரமாகக் கொண்டுள்ளோம் என்கின்ற மக்கள் இறைமையை உலகிற்கு வெளிப்படுத்தாமையே.
இவ்வாறு ஈழத்தமிழ் அரசியல்வாதிகளும் அனைத்துலகச் செயற்பாட்டாளர்களும் மக்கள் இறைமைக்கு முக்கியத்துவம் கொடுக்காது சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற சிறிலங்காவின் அரச இறைமைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தமையே இன்று ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தாங்கள் செயலிழந்து நிற்பதற்கு மூலகாரணமாகிறது. சிறிலங்கா குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இவ்வாண்டுக்கான திருத்தப்பட்ட வரைவு அறிக்கை உலகுக்கு இதனை மீண்டும் தெளிவாக்கியுள்ளது. இதற்கான வாக்களிப்பு என்பது சிறிலங்கா அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறைகளுக்கு மதியும் நிதியும் தொழில்நுட்பத் திறனும் வழங்கும் நடைமுறைக்கான ஏற்புடைமைச் செயற்பாடாகவே அமையவுள்ளது. இதனையும் கூட இந்த வடிவில் ஏற்க மறுத்து சிறிலங்காவின் இறைமைக்குள் எந்த விதத்திலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலையீட்டை அனுமதிக்க மறுக்கும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் வீரகேசரிச் செவ்வி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் காணாமல்தான் போனார்களா என்பதை முதலில் ஆராயப்பட வேண்டும் எனவும் இந்தியாவுடன் இணைப்புப்பாலம் தேவையற்றது எனவும் தெளிவாக உலகுக்கு விளக்கியுள்ளது. இவ்வாறு ஈழத்தமிழர் மேல் சிறிலங்கா மேற்கொண்ட இனஅழிப்புக்கு எந்தவொரு பரிகாரநீதியோ அல்லது இனஅழிப்பு செய்தவர்களுக்குத் தண்டனை நீதியோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தாலும் அந்த வடிவில் மேற்கொள்ளப்படாது யுத்த்தின் விளைவு என்ற கோத்தபாய பாணியிலேயே செயற்பாடுகள் அமையும் என்பது உறுதியாகி வருகிறது. இதே வெளிவிவகார அமைச்சர் யேர்மனிய, பின்லாந்து, மாலைதீவு வெளிவிகார அமைச்சர்களை அமெரிக்காவில் சந்தித்தார் என்பதும் முக்கியமான விடயம்.
சீனா கொழும்பில் தனது இன்றைய அரசமுறைமையின் 76 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய விழாவில் ராஜபக்சாக்கள் இருவரும் சிறிசோனவும் முன்னாள் அரசத்தலைவர்கள் எனக் கலந்து கொண்டனர். தேசிய மக்கள் சக்தியின் ரில்வின் டி சில்வாவும் அங்கிருந்தார். அங்கு சிறிலங்காவுக்கு அதன் முன்னேற்றத்திற்குச் சீனா முழுஅளவில் உதவும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது. அமெரிக்காவில் அதே காலத்தில் சிறிலங்காவின் அரசத்தலைவர் அமெரிக்க அரசத்தலைவர் தென்னாபிரிக்கா அரசத் தலைவர் இந்திய வெளிவிகார அமைச்சர் ஆகியோருடன் நடாத்திய தனிப்பட்ட கலந்துரையாடல்கள் சிறிலங்காவின் இன்றைய தேவைகளுக்கான உரையாடலாக அமைந்தது. அடுத்து அநுரகுமார திசநாயக்காவின் ஐக்கிய நாடுகள் சபையின் உரை ஊருக்கு உபதேசம் எனக்கும் உனக்கும் இல்லையடி என்ற கதையாக உலகின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் வளரச்சிகளுக்கும் வழிகாட்டும் அற்புதமான உரையாகவே அமைந்தது.
நம்மைப் பிரிக்கும் பயணத்திற்குப் பதிலாக கைகளை இணைக்கும் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென உருக்கமான அழைப்பை உலகிற்கு விடுத்தார். பலஸ்தீனத்தை அங்கீகரித்தது மட்டுமல்லாது இஸ்ரேலிய பலஸ்தீனிய மக்களின் மனங்களைப் புரிந்து கொண்டு அவர்கள் இருபகுதியினருக்குமான எதிர்காலத்தை உருவாக்குவதே அங்கீகாரத்தை விட அதிக முக்கியம் என்பதையும் உலகிற்குத் தெளிவாக்கிளார். ஆனால் இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் அரசாக யாழப்பாண வன்னியரசாக இருந்த நிலப்பரப்பு என்கின்ற வரலாற்று உண்மையை அவர் ஏற்க மறுக்கின்றார்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அரசியலமைப்பில் இணைக்க முயற்சிக்கவில்லை. அவருடைய சிறிலங்காப்படை தனது 76 வது ஆண்டு நிறைவை அவர் அமெரிக்காவில் உரையாற்றிய எச்சில் காய்வதற்கு இடையிலேயே எட்டு பௌத்த பீடங்களுக்குமான ‘அடமஸ்தந்திபதி’ முனைவர் பல்லேகம ஹேமரத்தினநாயக்க தேரரின் தலைமையிலேயே கொண்டாடத் தொடங்கி சிறிலங்கா எத்தகைய மதசார்பற்ற தன்மையைக் கொண்டுள்ளது என்பதை நிரூபித்தது.இதே நேரத்தில் செப்டெம்பர் 26 இல் நல்லூர் முதல் உலகெங்கும் தியாக தீபம் திலீபனின் 38வது நினைவேந்தலில் ஈழத்தமிழர்கள் “மக்கள் போராட்டம்” சனநாயக வழிகளில் தொடர்கிறது என்பதைத் திரண்டெழுந்து உலகிற்கு உறுதியளித்துள் ளனர். இதனை தாயகத்திலும் அனைத்துலகிலும் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களின் ஒருமைப்பாட்டுடனான செயலணிகள் மூலம் இறைமை குறித்த தெளிவை உலகிற்கு மீளுறுதி செய்வதன் வழி நடைமுறையாக்க வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணம். இளைய ஈழத்தமிழர்கள் தலைமையேற்று இதனை நடைமுறைப்படுத்தாவிடில் காலநீடிப்பு ஏற்படும் என்பதும் இலக்கின் தெளிவான சிந்தனையாகவுள்ளது.
ஆசிரியர்