BBNJ: புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை – நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

WhatsApp Image 2025 09 27 at 10.31.04 BBNJ: புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை – நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான சமுத்திர சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடன உடன்படிக்கையில் (BBNJ) 60 ஆவது உறுப்பு நாடு இணைந்ததை முன்னிட்டு, பிரான்ஸ் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு, செப்டெம்பர் 25 ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் அரச தலைவர்களின் பங்கேற்புடன் நியுயோர்க் நகரில் நடைபெற்றதுடன், இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அதில் கலந்து கொண்டார்.

இந்த உடன்படிக்கையில் இணைந்த 58 ஆவது உறுப்பு நாடாக, இலங்கை 2025 செப்டெம்பர் 16 ஆம் திகதி  இந்த உடன்படிக்கையில் இணைந்ததுடன், இதன் மூலம் இந்த உடன்படிக்கையின்  தரப்பு நாடாக மாறியது.

இரண்டு தசாப்த கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமை தொடர்பான உடன்படிக்கை (BBNJ) என்று அழைக்கப்படும் இந்த உடன்படிக்கையில் தற்போது 60 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதுடன், அது அந்த உடன்படிக்கை நடைமுறைக்கு வர வழிவகுத்தது.

உலக  சமுத்திரங்களில் 2/3 பகுதியை உள்ளடக்கிய இந்த உடன்படிக்கை ஊடாக சமுத்திர உயிரியல் பல்வகைமையினைப் பாதுகாக்கவும், நிலைபேறான பயன்பாட்டிற்கும், சுதேச அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் அந்த உயிரியல் பல்வகைமையின் பயனைப் பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த உடன்படிக்கை 2026 ஜனவரி 17 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது.