சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தது யார்? – நாமல் கேள்வி

இலங்கையில் அண்மைக் காலமாக  இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது.

தொடர்ந்து  அரசாங்கம் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து  போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்க்ளையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது  யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (26) கொழும்பு நீதி மன்றத்துக்கு சமூகமளித்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் ஊடகவியலாளர்  ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்ற வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தேன். எதிர்வரும் 18 ஆம் திகதியன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. திருடனும் மக்களோடு இணைந்து திருடனை பிடிப்பது போல தான் என்.பி.பி அரசாங்கமும் செயற்படுகிறது. அரசாங்கத்தில் உள்ள பலரின் சொத்து விபரங்கள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது. அரசாங்கத்தின் உயர் அதிகாரத்தில் இருந்தவர்களே சுங்கத்திலிருந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்துள்ளனர்.  ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர்  கொள்கலன்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன  என்பது தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

குறித்த கொள்கலன்கள் சுங்கப் பிரிவு மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால் பரிசோதிக்கப்பட இருந்ததுடன், சர்வதேச புலனாய்வு பிரிவிடம் இருந்தும் தகவல்களும் கிடைத்திருந்தன. இந்நிலையில் அவை விடுவிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் தொடர்ந்தும் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து  போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்களையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும் விடுவிக்க அனுமதியளித்தது  யார்? என்பதை விரைவில் வெளிப்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் எம்மீது பழி சுமத்தி இதிலிருந்து தப்ப முடியாது. ஒரு வருடத்தை எமது தரப்பை குற்றம்சாட்டியே கடந்து விட்டனர் மீதமுள்ள 4 வருடங்களையும் அவ்வாறே கடந்து விடுவார்கள். என்.பி.பி அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியுள்ளது. அதை தற்போது மக்களும் உணர்ந்துள்ளனர் என்றார்.