ஓயா திட்டத்தை உடன் நிறுத்துங்கள் – ரவிகரன்

வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் கிவுல் ஓயா என்னும் பெயரில் நீர்பாசனத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் குளங்கள் மற்றும் அவற்றின் கீழான காணிகளையும், தமிழர்களின் பூர்வீக கிராமங்களையும் அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள இந்தக் கிவுல் ஓயா திட்டத்தினை உடன் நிறுத்தி, தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கும், பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு தன்னிறைவு பெறுவதற்கும் வழிவகைகளை ஏற்படுத்துமாறும் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (26) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மகாவலி அதிகார சபையின் (எல்) வலயத்தால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தால் எமது தமிழ் மக்களுக்கு ஏற்படவுள்ள பாரிய பாதிப்பு நிலைதொடர்பிலும் இந்த உயரியசபையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மாயா அல்லது பெரிய ஆறு மற்றும் சூரியன்ஆறு ஆகிய ஆறுகளை மறித்து பாரிய அணைக்கட்டு அமைக்கப்பட்டு கிவுல் ஓயாத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தில் 6000 ஏக்கர் நீர்ப்பாசன விவசாயக் காணிகள் வெலிஓயாவில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இவ்வாறாக கிவுல் ஓயா திட்டத்தினைச் செயற்படுத்தினால் வவுனியாவடக்கிலுள்ள தமிழர்களின் பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான வயல்நிலங்கள், தமிழர்களின் பூர்வீக கிராமங்கள் பலவும் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அந்த வகையில் இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக் குளங்களும், வெடிவைச்சகல்லு குளத்தின் கீழ் வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடை கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்து பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும்.

அதேவேளை தமிழர்களின் இதயபூமி எனப்படுகின்ற பூர்வீக மணலாற்றுப் பிரதேசத்தை வெலிஓயாவாக மாற்றிவிட்டு அங்கு அத்துமீறிக்குடியேற்றப்பட்டுள்ள பெரும்பான்மை இனத்தவர்களே இந்த கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தால் பயன்பெறவுள்ளனர்.

அத்தோடு தற்போது ஆட்சி பீடத்தில் இருக்கின்ற இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் இந்த கிவுல் ஓயாத் திட்டத்தை செயற்படுவதில் அதிக அக்கறையோடு செயற்படுவதாகவும் அறியமுடிகின்றது.

தமிழ் மக்களின் சிறிய பூர்வீக விவசாயக்குளங்கள் மற்றும் அவற்றின் கீழான வயல்நிலங்கள், தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்கள் என்பவற்றை விழுங்குகின்ற இந்த கிவுல் ஓயாத் திட்டத்தை தயவுசெய்து உடனடியாக நிறுத்துமாறு இந்த உயரியசபையினூடாக கோருக்கின்றேன்.

அத்தோடு மகாவலி அதிகார சபை இந்தத் திட்டத்திற்கென ஆக்கிரமித்து வைத்திருக்கின்ற தமிழர்களது பூர்வீக சிறிய விவசாய குளங்கள் மற்றும் அவற்றின் கீழான விவசாயநிலங்களையும், பூர்வீகத் தமிழ்க் கிராமங்களையும் உடனடியாக விடுவிக்குமாறு இந்த உயரிய சபையினைக் கோருகின்றேன்.

எமது தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கும், பூர்வீக விவசாய நிலங்களில் விவசாயத்தை மேற்கொண்டு தன்னிறைவு பெறுவதற்கும் வழிவகைகளை ஏற்படுத்துமாறும் இந்த உயரிய சபையைக் கோருகின்றேன் என்றார்.