மனித உரிமைகள் தொடர்பில் இலங்கையின் முயற்சிகளுக்கு ஐ.நா. வரவேற்பு

அமைதி காக்கும் ஒத்துழைப்பு செயற்பாடுகளை ஆழப்படுத்துவதற்கு இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையும் இணங்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரே ஃபிரெஞ்ச் (Marc-André Franche), ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதி பணிப்பாளர் கரேன் வைட்டிங் (Karen Whiting) மற்றும் இலங்கை பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் திட்டங்களில் இலங்கை துருப்புக்களின் ஈடுபாடு குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம், மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளை மார்க் அண்ட்ரே ஃபிரெஞ்ச் வரவேற்றுள்ளார்.

இலங்கையின் அமைதி காக்கும் திறனை வலுப்படுத்துவதற்கான ஆதரவை ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இதன்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.