காற்றாலைத் திட்டத்தை உடனடியாகக் கைவிடுக: அரசுக்கு செல்வம் எம்.பி. எச்சரிக்கை!

மன்னாரில் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள காற்றாலை மின்னுற்பத்தித் திட்டங்களை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல் போராட்டம் தீவிரமாகும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:

மன்னாரில் காற்றாலைத் திட்டங்கள் வேண்டாம் என 50 நாள்களுக்கு மேலாக மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலகத்துக்கு முன்பாகவும் மன்னார் மக்களும், சிவில் அமைப்பினரும் போராட்டம் நடத்தியிருந்தனர். ஆனால் இந்தப் போராட்டங்களையெல்லாம் கருத்திற்கொள்ளாத ஜனாதிபதி அநுர, காற்றாலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அறிவுறுத்தல்களையும் அனுமதியையும் வழங்கியுள்ளார்.

மன்னார் மக்களின் வாழ்வுரிமையை இந்த அரசாங்கம் மறுத்து வருகின்றது. மக்களின் இறையாண்மையை அரசாங்கம் மீறுகின்றது. இது நியாயமா? என இந்த உயரிய சபையில் கேட்கின்றேன்.தற்போதைய ஜனாதிபதி போராட்ட இயக்கமொன்றில் இருந்துவந்துதான் இன்று அரசாங்கத்தின் தலைவராகியுள்ளார். ஆனால் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கி, எமது மக்களின் உயிரை துச்சமென மதிக்கும் வகையிலேயே செயற்படுகின்றார்.

இவ்வாறான செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.காற்றாலைத் திட்டத்துக்கு எதிராக மன்னார் மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடரும். இனிவரும் நாள்களில் கூடுதல் வீரியத்துடன், அதிகளவான மக்களுடன் அந்தப் போராட்டங்களை முன்னெடுப்போம் – என்றார்.