தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம், நேரடியாகப் பேசுவதற்கு இலங்கை தமிழரசுக் கட்சி தயாராகி வருகிறது.
இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைக்கு, நேரம் ஒதுக்குமாறுக் கோரி, “தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு” என தலைப்பிடப்பட்ட கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு இலங்கைத் தமிழரசு கட்சி அனுப்பி வைத்துள்ளது.
ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் ஆகின்ற நிலையில், வழங்கப்பட்ட உறுதிமொழிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், முதன்மையான தமிழ் அரசியல் கட்சியாக, தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு தாங்கள் தயாராக உள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
தங்களது மத்திய குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாகவும் இலங்கை தமிழரசு கட்சி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலங்களிலும் அதன் பின்னரான சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்று குறிப்பிட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்கான அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.