ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) இடையிலான சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை அமோகமாக வரவேற்றதுடன் கடந்த வருடத்தில் மனித உரிமை தொடர்பில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரியவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அமெரிக்காவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த சந்தரசிறி ஜெயசூரிய உள்ளிட்டோரினால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதும் இணைந்துள்ளார்.
இந்நிலையில்,வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமெரிக்க நேரப்படி இன்று புதன்கிழமை (24) பிற்பகல் 3:15 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.